இந்தியா-மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-மியான்மர் இடையே கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பது உள்பட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின.
மியான்மர் தலைநகர் நேபிடாவில் அந்நாட்டு தேசியத் தலைவர் ஆங் சான் சூகியுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி.
மியான்மர் தலைநகர் நேபிடாவில் அந்நாட்டு தேசியத் தலைவர் ஆங் சான் சூகியுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியா-மியான்மர் இடையே கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பது உள்பட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின.
பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் ஜனநாயகத் தேசியத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரிடையே நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தகள் கையெழுத்தாகின. இவற்றில், முக்கியமாக, கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதேபோல், இரு நாடுகளும் தங்கள் நாட்டு கடற்பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இந்தியா-மியான்மர் இடையே, வரும் 2020-ஆம் ஆண்டு வரை கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக, மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதவிர, தேர்தல் பணிகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் - மியான்மர் தேசியத் தேர்தல் ஆணையம் இடையேயான ஒப்பந்தம், இந்திய பிரஸ் கவுன்சில் - மியான்மர் பிரஸ் கவுன்சில் இடையான ஒப்பந்தம், மியான்மரின் யாமேதின் நகரில் உள்ள பெண் காவலர்கள் பயிற்சி மையத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு உள்பட 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட உறுதி: முன்னதாக, மோடியும், ஆங் சான் சூகியும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுத்துவது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடுவது என்றும் இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, மோடி கூறியதாவது: மியான்மர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை இந்தியா புரிந்துகொள்கிறது.
குறிப்பாக, ராக்கைன் நகரில் நிகழ்ந்த வன்முறையில் ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில், மியான்மரின் கவலையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில், தற்போதைய பிரச்னைக்கு தீர்வு கண்டு, நாட்டில் அமைதியை மீட்டெடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மியான்மரின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில், நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மியான்மர் குடிமக்களுக்கு இலவச விசா: மேலும், இந்தியா வரவிரும்பும் மியான்மர் குடிமக்களுக்கு கட்டணமின்றி நுழைவு இசைவு வழங்கப்படும் என்றார் அவர்.
மோடியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி பேசுகையில், ''மியான்மர் சந்தித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு ஆதரவு அளிக்கும் இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகளால், அந்நாட்டில் அகதிகளாக வாழும் ரோஹிங்கியா சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா தீவிரவாதிகள், கடந்த மாதம் நிகழ்த்திய தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால், அந்த மாகாணத்தில் பதற்றம் நிலவுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து மியான்மருக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் நேபிடாவில் மியான்மர் அதிபர் ஹிடின் கியா, ஆங் சான் சூகி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com