தேச நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்க மாட்டோம்: பிரதமர் மோடி

தேசத்தின் நலனுக்காக எத்தகைய பெரிய மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதற்கும் தனது அரசு தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இந்திய வம்சாவளி மக்களைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இந்திய வம்சாவளி மக்களைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி.

தேசத்தின் நலனுக்காக எத்தகைய பெரிய மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதற்கும் தனது அரசு தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, யாங்கூனில் நடைபெற்ற அந்நாட்டு வாழ் இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
இந்தியாவில் கடந்த ஆண்டு உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது தொடர்பான முடிவை எனது அரசு செயல்படுத்தியது. இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது, நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான மிகப்பெரிய முடிவுகளை கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் எனது அரசு எடுத்துள்ளது. இந்த முடிவுகள் எடுக்கப்படுவதற்கு, அரசியலைக் காட்டிலும், தேச நலனே மிகவும் பெரியது என்று எனது அரசு கருதுவதே காரணம் ஆகும்.
நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது தொடர்பான முடிவை எனது அரசு எடுத்தது. இந்த முடிவானது, நாட்டில் லட்சக்கணக்கானோர், வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை டெபாசிட் செய்திருப்பதையும், அவர்கள் வரிகள் எதையும் செலுத்தாமல் இருப்பதையும் கண்டுபிடிப்பதற்கு உதவியது. கருப்புப் பணத்தைக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சுமார் 2 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை எனது அரசு ரத்து செய்துவிட்டது.
ஊழல்வாதிகள் தங்களது தவறுகளுக்காக நாட்டு மக்கள் 125 கோடி பேரை விலை கொடுக்கச் செய்து கொண்டிருந்தனர். இதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. கருப்புப் பணம் எங்கிருந்து வருகிறது? அந்த பணம் எங்குச் செல்கிறது? என்பதை அறிந்து கொள்ளாத வகையில் அவர்கள் செயல்பட்டனர்.
ஐஎன்ஏ நினைவுச் சின்னம்: பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மியான்மர் வந்தார். அப்போது அவர், 'உங்களின் ரத்தத்தை எனக்குத் தாருங்கள்; சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன்' என்று தெரிவித்தார். இதையேற்று அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு அளித்தனர்.
பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தினர் (ஐஎன்ஏ) செய்த தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், மியான்மரில் இந்திய தேசிய ராணுவத்துக்கு நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. யாங்கூனில் அந்த நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான இடத்தை இந்தியாவும், மியான்மரும் கூட்டாகத் தேர்வு செய்யும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com