மகாராஷ்டிரம்: விநாயகர் சிலை கரைப்பின்போது 15 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சிகளின்போது 15 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சிகளின்போது 15 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், ஒளரங்காபாத் மாவட்டத்தின் பிட்கீன் நகரைச் சேர்ந்த ஷிவானி ஏரியில் விநாயகர் சிலைகளைக் கரைக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும், புணே மாவட்டத்தில் 4 பேரும், ஜல்காவ்ன் மாவட்டத்தில் 2 பேரும், நாசிக் மற்றும் பீட் மாவட்டங்களில் தலா ஒருவரும் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகளின்போது உயிரிழந்தனர்.
இவ்வாறு விநாயகர் சிலைக் கரைப்பு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சிலைக் கரைப்பின்போது மேலும் 4 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நாசிக், அகமதுநகர், சதாரா, பர்பானி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக அவர்கள் கூறினர்.
எனினும், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பான முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, மும்பையில் மிகப் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் சிலை 22 மணி நேர ஊர்வலத்துக்குப் பிறகு அரபிக் கடலில் புதன்கிழமை காலை கரைக்கப்பட்டது.
அதேபோல், புணே நகரில் டக்டூசேட் ஹல்வா கணபதி சிலை 20 மணி நேர ஊர்வலத்துக்குப் பிறகு கடலில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கடல், குளங்கள், ஏரிகளில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளைக் கரைத்து வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com