மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு ஆயுள்; இருவருக்கு தூக்கு - தண்டனை முழு விபரம்!

இந்தியாவை அதிர வைத்த 1993-மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியான அபு சலீம் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனையும்,  தாஹிர் மெர்ச்சண்ட் உட்பட இருவருக்கு தூக்கு தண்டனை ..
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு ஆயுள்; இருவருக்கு தூக்கு - தண்டனை முழு விபரம்!

மும்பை: இந்தியாவை அதிர வைத்த 1993-மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியான அபு சலீம் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனையும்,  தாஹிர் மெர்ச்சண்ட் உட்பட இருவருக்கு தூக்கு தண்டனை அளித்தும் மும்பை தடா சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1993-ம் வருடம் மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. மும்பையின் 12 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதன்காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டது.

இதில் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், அவனது கூட்டாளிகளான அபு சலீம், முஸ்தஃபா தோஸ்ஸா, கரிமுல்லா கான், ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்சண்ட் மற்றும் அப்துல் க்யுயாயும் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளான அபுசலீம் உள்ளிட்ட ஏழு பேரும் ஜுன் 16, 2017 அன்று குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஜுன் 28-ந் தேதி 2017-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக குற்றவாளிகளில் ஒருவரான முஸ்தஃபா தோஸ்ஸா உயிரிழந்தான். இதையடுத்து இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி நடைபெற்றது. அபு சலீம் உள்ளிட்ட 5 பேர் மீதான இறுதி தண்டனை விவரத்தை வருகிற செப்டம்பர் 7-ந் தேதியன்று அறிவிக்கப்படும் என தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி மும்பை தடா நீதிமன்ற நீதிபதி சனாப் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி முக்கிய குற்றவாளியான அபு சலீம் மற்றும் கரிமுல்லா கான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இருவருக்கும் அவர்கள் மீதான கடுமையான குற்றசாட்டுகளின் தீவிரத் தன்மை கருதி தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான் மற்றும் தாஹிர் மெர்சண்ட் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ரியாஸ் சித்திக்குக்கு 10 ஆண்டு சிறை தணடனை விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com