இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாற முடியாது

இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாற முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாற முடியாது

இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாற முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது கடந்த 2015-இல் தில்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது நாட்டில் சகிப்பின்மை வளர்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார். வழக்கமான பொருளாதார விவகாரங்களைத் தாண்டி அவர் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின் கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரகுராம் ராஜன், தற்போது எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகத்தில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரகுராம் ராஜன், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:
பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் (கௌரி லங்கேஷ்) படுகொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அவரது எழுத்து (ஹிந்துத்துவ அரசியலுக்கு எதிரான கருத்துகள்) காரணமாகவே அவர் கொல்லப்பட்டார் என்று மக்கள் முடிவுக்கு வந்து விட்டதாலேயே இந்தப் படுகொலை ஒரு விவகாரமாகியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. இந்த வழக்கில் புலன்விசாரணை நடைபெறட்டும். அது தொடர்பாக அதிக அளவிலான தகவல்கள் நமக்குக் கிடைக்கும் வரை நாம் ஒரு முடிவுக்கு வந்து விடுவது சரியல்ல.
தில்லியில் கடந்த 2015-இல் நான் ஆற்றிய உரையானது, சகிப்புத்தன்மை பற்றியதுதான். சகிப்புத்தன்மை என்பது இந்தியாவின் பாரம்பரியமாகும். அது இந்தியாவின் பலமாகும். அது குறித்து இளைஞர்களுக்கு (மாணவர்கள்) நான் ஆற்றிய உரைக்காக பெருமிதம் கொள்கிறேன். நமது பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்புத்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாகும்.
குறிப்பாக, சேவை மற்றும் புத்தாக்கப் பொருளாதாரமாக நாம் மாற விரும்பும் நிலையில், சகிப்புத்தன்மையின் அவசியம் மேலும் கூடுகிறது. எனவே அதை ஒரு பலமாகக் கருதுகிறேன். நாம் சகிப்புத்தன்மையை இழக்
காமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனது அந்த உரையை நீங்கள் பார்த்து, பொறுப்புள்ள இந்தியர் முறையில் உங்களால் அதில் எந்த வரியை ஏற்க முடியவில்லை என்று என்னிடம் கூறலாம். உயர் பதவிகளை வகிப்பவர்களுக்கு, நாட்டுக்கு எது நல்லதோ அதைப் பேசும் பொறுப்பு உள்ளது.
தில்லி ஐஐடி-யில் நான் ஆற்றிய உரைக்காக எனக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி ஏதும் வரவில்லை. மாறாக, அதன் பின் ஒரு வாரம் கழித்து ஒரு மத்திய அமைச்சர் என்னிடம் பேசினார். 'நான் கூறி வருவதையே நீங்கள் பேசியிருக்கிறீர்கள்' என்று அவர் என்னிடம் கூறினார்.
இந்தியா ஒரு நேர்க்கோட்டில் நகர்வதில்லை. தனியுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நம்பிக்கையை அளிக்கிறது. அத்தீர்ப்பு சகிப்புத்தன்மையின் பரப்பை விரிவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது முக்கியமானது என்பதோடு நம் நாடு எந்தத் திசையில் செல்கிறது என்பதை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது என்றார் ரகுராம் ராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com