இந்தியாவுக்கு எஃப்-16, எஃப்-18 ரக போர் விமானங்களை விற்க டிரம்ப் அரசு ஆதரவு

இந்தியாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 மற்றும் எஃப்-18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு முழு ஆதரவு தருவதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்திடம்
இந்தியாவுக்கு எஃப்-16, எஃப்-18 ரக போர் விமானங்களை விற்க டிரம்ப் அரசு ஆதரவு

இந்தியாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 மற்றும் எஃப்-18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு முழு ஆதரவு தருவதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்திடம் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை மூலம் இந்திய - அமெரிக்கப் பாதுகாப்பு நல்லுறவு அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறிச் செல்லும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சர் அலைஸ் வெல்ஸ், நாடாளுமன்ற துணைக் குழுவுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவுடனான இருதரப்பு உறவில், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும்.
அதனை மனதில்கொண்டு, இந்தியாவுக்கு அதிநவீன எஃப்-16 மற்றும் எஃப்-18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான பரிசீலனையை டிரம்ப் அரசு முழுமையாக ஆதரிக்கிறது.
இந்த விற்பனை இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்தக்கட்டத்துக்கு இட்டுச் செல்லும்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாவலனாக இந்தியா திகழ வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது. எனவேதான் அந்த நாட்டின் கரங்களை வலுப்படுத்துவதற்கு அரசு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்திய - பசிபிக் கடல் பகுதி மிக முக்கியமான வணிக வழித்தடம் ஆகும். இந்தப் பகுதி வழியாகத்தான் உலகின் சுமார் 90,000 வர்த்தகக் கப்பல்களில் பாதி எண்ணிக்கையிலான கப்பல்கள் செல்கினறன. அவற்றில் ஏராளமானவை அமெரிக்க சரக்குக் கப்பல்களாகும். எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களில் மூன்றில் இரண்டு பங்குக் கப்பல்கள் இந்திய -பசிபிக் கடல் பகுதியைத்தான் கடந்து செல்கின்றன.
உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி பேர் இந்திய-ஆசிய பசிபிக் பகுதியில் வசிக்கிறார்கள். மேலும், இந்தப் பகுதியில்தான் உலகிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் உள்ளன.
எனவே, அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
அமெரிக்காவுடன் ஒருமித்த சிந்தனையுடைய இந்தியா, சர்வதேசச் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்காவின் மிகச் சிறந்த பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டாளியாகும். இந்தியாவுடனான பாதுகாப்பு நல்லுறவுக்காக நாம் செய்யும் முதலீடு, எதிர் வரும் காலங்களில் சிறந்த பலனைக் கொடுக்கும்.
சக ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவைப் போலவே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது.
இந்தியர்களையும், அமெரிக்கர்களையும் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகள் நிறைந்த மோசமான பகுதியை இந்தியா அண்டை நாடாகக் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு தற்போது உள்ள அளவுக்கு வேறு எப்போதும் வலுவாக இருந்ததில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பே கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபரின் சந்திப்பு, பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அச்சாரமாக அமைந்தது என்று அலைஸ் வெல்ஸ் நாடாளுமன்றத்திடம் எழுத்து மூலம் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com