ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும்

ஒடிஸாவில் வரும் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும்

ஒடிஸாவில் வரும் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக ஒடிஸா வந்திருக்கும் அவர், புவனேசுவரத்தில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அவர் கூறியதாவது:
ஒடிஸா மாநிலத்துக்கென கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3.95 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இருந்தும் ஒடிஸாவின் வளர்ச்சியில் பெரிதாக மாற்றம் எதையும் காண முடியவில்லை.
சில திட்டங்களை பிஜு ஜனதா தள அரசு செயல்படுத்தத் தவறியதும் மத்திய அரசுடன் ஒத்துழைக்காததால் வேறு பல திட்டங்கள் முடங்கிப்போனதும்தான் காரணம்.
விளம்பரம் மூலம் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக்கொள்வதில் நவீன் பட்நாயக் கில்லாடி.
நவீன் அரசு ஒத்துழைப்பு தருவதில்லை: மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசுக்கு கொஞ்சம்கூட நவீன் பட்நாயக் அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. 
ஒடிஸாவில் சுரங்கக் கனிமங்களை வெட்டியெடுத்ததில் நடந்திருக்கும் மோசடிதான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று. இயற்கை வளங்களை சுரண்டியதைத் தடுக்கத் தவறியதற்காக ஒடிஸா அரசை மிகக் கடுமையாக உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்திருக்கிறது.
ஒடிஸாவில் நடந்திருக்கும் சீட்டு நிதி மோசடியால் கோடிக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டோர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த மோசடியைத் தடுக்க நவீன் பட்நாயக் அரசு எதையும் செய்யவில்லை.
சீட்டு நிதி மோசடியை எந்தவித நெருக்குதலும் இன்றி சுயேச்சையாக சிபிஐ விசாரித்து வருகிறது. மோசடியில் ஈடுபட்டோர் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அல்லது ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருப்பினும் அவர்களை விட மாட்டோம்.
மகாநதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நடுவர் மன்றம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் ஒடிஸாவுக்குச் சொந்தமான ஒரு லிட்டர் தண்ணீரைக்கூட அடுத்தவர் எடுக்க அனுமதிக்க மாட்டோம். ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். வேறு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார் அமித்ஷா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com