தேரா தலைமையகத்தில் பிளாஸ்டிக் நாணயங்கள்: முதல் பூதம் வெளியே வந்தது

ஹரியானா மாநிலம் சிர்சாவில் அமைந்துள்ள தேரா சச்சா சௌதா தலைமையகத்தில் தொடங்கிய சோதனையில் முதல் கட்டமாக அந்த அமைப்பினால் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேரா தலைமையகத்தில் பிளாஸ்டிக் நாணயங்கள்: முதல் பூதம் வெளியே வந்தது


சிர்சா: ஹரியானா மாநிலம் சிர்சாவில் அமைந்துள்ள தேரா சச்சா சௌதா தலைமையகத்தில் தொடங்கிய சோதனையில் முதல் கட்டமாக அந்த அமைப்பினால் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள் விளையாடுவது போன்ற பிளாஸ்டிக் நாணயங்கள், தலைமையகத்துக்குள் இருக்கும் அனைத்துக் கடைகளிலும் இருந்தன. இது நாணயங்களாக கருதப்பட்டு, அந்த கடைகளுக்குள் புழக்கத்தில் விடப்பட்டிருந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் 35 பேர் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த தேரா அமைப்பின் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த குர்மீத்தின் ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிர்ஸா நகரில் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தேரா அமைப்பின் தலைமையகத்தில் சோதனை நடத்த ஹரியாணா மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள், பலத்த பாதுகாப்புடன் இன்று சோதனையைத் தொடங்கினர்.

தலைமையக வளாகத்துக்குள் இருந்த கடைகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் 10 என்றும், நீல நிறத்தில் 1 என்றும் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகள் இருந்தன. 

அது பற்றி விசாரித்ததில், இந்த பிளாஸ்டிக் நாணயங்கள், தலைமையத்துக்குள் இருக்கும் அனைத்துக் கடைகளிலும் பணமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், உண்மையான பணம் கையில் இல்லாவிட்டால், இந்த பிளாஸ்டிக் நாணயங்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிளாஸ்டிக் நாணயங்கள் வெளியே எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், தேரா சச்சா அமைப்பினர் தங்களுக்கான தனி விதிமுறைகளுடன் இங்கே வாழ்ந்து வந்திருப்பது வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது.

தேரா தலைமையகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும், காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளாகத்துக்குள் பள்ளிகள், கடைகள், வீடுகள், மருத்துவமனை, ரிசார்ட் என அனைத்தும் உலகப் புகழ்பெற்ற கட்டடங்களின் மாதிரிகளில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com