பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு காங்கிரஸ் அரசு மீது பழிபோடும் பாஜக

மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு காங்கிரஸ் அரசு மீது பழிபோடும் பாஜக


பெங்களூர்: மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவின் மெங்களூர் நகரில், மாநில பாஜகத் தலைவர் பிஎஸ் எடியூரப்பா தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, சுமார் 850க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கர்நாடகாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தின் போது பேசிய எடியூரப்பா, தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வகையில் ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடியவரும், மூத்த பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பழிபோடும் அரசியலை நடத்தினார்.

அதோடு, சமூக ஆர்வலர் கல்பர்கி மற்றும் கௌரி லங்கேஷ் படுகொலைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இதுபோன்ற கொலைகள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதையே காட்டுவதாகவும், எனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா இவற்றுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதையும் வாக்குகளாக மாற்ற பாஜக முயல்கிறது. முதலில் பாஜக தொண்டர்களின் மரணம் குறித்து பேச விரும்பியது. தற்போது அதில் இருந்து தாவி, பத்திரிகையாளர் படுகொலைக்கு குரல் கொடுப்பது போல பாசாங்கு செய்ய முயல்கிறார்கள். இது எதற்காக என்பது நன்றாகவே புரிகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com