மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக சதி

கர்நாடகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக சதி செய்து வருவதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக சதி

கர்நாடகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக சதி செய்து வருவதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
'மங்களூரு செல்வோம்' என்ற பெயரில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த பாஜகவினர் முற்பட்டுள்ளனர். இதன்மூலம் சமூக அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க அக் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் அரசு வாய்ப்பளிக்காது.
மங்களூரில் பேரணி நடத்துவதாக பாஜக ஏற்கெனவே கூறியிருந்தால், அதற்கு அனுமதி அளித்திருப்போம். முன் அனுமதி பெற்று பாஜகவினர் ஊர்வலம், பேரணி, போராட்டம் நடத்துவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. 
இரு சக்கர வாகன ஊர்வலத்தின் மூலம் மாநிலத்தில் நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முற்பட்டுள்ளது. இதனால்தான் ஊர்வலத்துக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது பொதுமக்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது. அமைதி, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் காங்கிரஸ் அரசு அக்கறையாக உள்ளது. எனவே, மாநிலத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க பாஜகவை அனுமதிக்க மாட்டோம்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று 
சி-ஃபோர் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மக்களை குழப்பி திசை மாற்றுவதற்காக காப்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைப்பதில் மாநில அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு திறந்த மனதுடன் இருக்கிறது. சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க மாட்டோம் என்று அரசு கூறவில்லை. கெளரி லங்கேஷின் குடும்பத்தினர் விரும்பினால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைப்பதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளேன். 
தனது பத்திரிகையில் சங் பரிவார் குறித்து அவமதிக்கும் கருத்துகளை எழுதாமல் இருந்திருந்தால், கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று பாஜக எம்எல்ஏ ஜீவராஜ் கூறியிருக்கிறார்; அதில் உள்ள அர்த்தம் என்ன என்பது புரிந்து கொள்ளமுடிகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com