ராணுவம் நவீனமயம்; ஊழியர் நலனுக்கு முக்கியத்துவம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்றும் முப்படையினரின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக வியாழக்கிழமை
ராணுவ தளவாட உற்பத்தித் துறை சார்பில் தில்லியில் நடைபெற்ற கண்காட்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ராணுவ தளவாட உற்பத்தித் துறை சார்பில் தில்லியில் நடைபெற்ற கண்காட்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்றும் முப்படையினரின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் (55) உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்ற நிர்மலா சீதாராமன், தில்லியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார். அங்கு அவரை சக அமைச்சர்களும், உயரதிகாரிகளும் வரவேற்றனர். அப்போது சிறப்புப் பூஜைகளையும் புரோகிதர்கள் நடத்தினர். அதன் பின்னர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் செயலாற்றத் தொடங்கினார்.
இதன் மூலம் இந்திரா காந்திக்குப் பிறகு அப்பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பதவி வகித்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதுவும், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை இலாகா அவருக்கு அளிக்கப்பட்டது.
சவால் மிகுந்த பாதுகாப்புத் துறை அமைச்சகமானது சுதந்திர இந்தியாவில் பெரும்பாலும் ஆண்களின் வசமே இருந்து வந்தது. நாட்டின் இரும்புப் பெண் என அழைக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே அந்த வரலாற்றை மாற்றி தன்னிடம் அந்தத் துறையை வைத்துக் கொண்டார்.
அவரது மறைவுக்குப் பிறகு 33 ஆண்டுகளாக அப்பதவியை ஆண் அமைச்சர்களே வகித்து வந்தனர். இந்நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியை மத்திய பாஜக அரசு வழங்கியது. இந்திராவைப் பொருத்தவரை வேறு சில துறைகளுடன் சேர்த்து கூடுதல் பொறுப்பாகவே பாதுகாப்புத் துறையை கவனித்து வந்தார். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு வேறு எந்தத் துறைகளும் வழங்கப்படாமல் பாதுகாப்புத் துறைப் பொறுப்பு மட்டும் பிரத்யேகமாக அளிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்கும்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடனிருந்தார். அப்போது தாம் கூடுதலாக வகித்து வந்த பாதுகாப்புத் துறை பொறுப்புகளை நிர்மலா சீதாராமனிடம் அவர் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பாதுகாப்புப் படைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப் போகிறேன். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். பாதுகாப்புத் துறையினரின் நீண்ட கால பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும் திட்டமிட்டுள்ளேன். ராணுவத் தளவாடங்கள் அனைத்தையும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ரூ.13 கோடி ஒதுக்கீடு: பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், முதல் பணியாக ஓய்வுபெற்ற ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனுக்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 8,685 ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவர் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், 'கடுமையான போராட்டச் சூழலிலும், சவால் நிறைந்த எல்லைப் பகுதிகளிலும் நாட்டைக் காப்பதற்காக அயராது பாடுபடும் ராணுவத்தினரின் நலன்களைக் காப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com