10% பொருளாதார வளர்ச்சியை எட்டும் முன்பு பெருமிதம் கொள்ளக் கூடாது: மத்திய அரசு மீது ரகுராம் ராஜன் மறைமுக தாக்கு

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு 8 முதல் 10 சதவீதம் என்ற வளர்ச்சியை எட்டும் முன்பு யாரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
10% பொருளாதார வளர்ச்சியை எட்டும் முன்பு பெருமிதம் கொள்ளக் கூடாது: மத்திய அரசு மீது ரகுராம் ராஜன் மறைமுக தாக்கு

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு 8 முதல் 10 சதவீதம் என்ற வளர்ச்சியை எட்டும் முன்பு யாரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
தங்களுடைய ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு கூறி வரும் நிலையில் ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் மேலும் கூறியதாவது:
கலாசாரம், வரலாற்றுத் தொன்மை ஆகியவை குறித்து பிற உலக நாடுகளுக்கு இந்தியா உபதேசம் செய்யலாம். ஆனால், பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியா யாருக்கும் பாடம் நடத்த முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு 8 முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா தன்னை வேகமாக வளரும் பொருளாதார சக்தி என்று மார்தட்டிக் கொள்ள முடியும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வேண்டுமென்றால் தனியார் துறையினரின் முதலீடு அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 8 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி இதைவிட வேகமாக அதிகரித்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்காலத்தில் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க முடியும்.
நாம் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளோம் என்று கருதிக் கொள்கிறோம். எனினும், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது பொருளாதாரம் இப்போதுவரை சிறியதாகவே உள்ளது. சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட 5 மடங்கு பெரியதாக உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தையும், இந்தியப் பொருளாதாரத்தையும் சமமாகக் கருதி ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட வேண்டுமென்றால் சீனா பொருளாதார ரீதியாக பின்தங்க வேண்டும்; அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு மிகவேகமானதாக இருக்க வேண்டும். நமது பொருளாதாரம் குறித்து தேவைக்கு அதிகமான நம்பிக்கையை கொள்ளக் கூடாது. சிறிது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் கூறுகிறேன் என்றார் ரகுராம் ராஜன்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொண்டது. அந்த காலக்கட்டத்தில் ஆர்பிஐ ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால்தான், பதவி நீட்டிப்பு வேண்டாமென்று அவர் கூறிவிட்டார் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 'இந்தியா வேகமாக வளர்கிறது' என்று கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரகுராம் ராஜன், 'குருடர்களின் உலகில் ஒற்றைக் கண் உடையவர்தான் ராஜா' என்று பதிலளித்தார்.
இதையடுத்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். 'ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியராக இல்லை. அவரை ஆர்பிஐ ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்று கூறினார்.
இது தொடர்பாகவும் ரகுராம் ராஜனிடம் இப்போது கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், இதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழரான ரகுராம் ராஜன், அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை (கிரீன் கார்டு) பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதற்கு முந்தைய காலாண்டில் இது 6.1 சதவீதமாக இருந்தது. ஆனால் அந்த இரு காலாண்டிலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என்ற நிலையான அளவில் இருந்தது.
இந்தியாவின் பொருளாதாரம் பின்தங்கியதற்கு மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com