ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிரடிச் சோதனை

முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் சென்னை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர்.
ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிரடிச் சோதனை

முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் சென்னை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர். அவர் தனது பதவிக் காலத்தின்போது ஜார்க்கண்டில் இரும்புத்தாது எடுக்க விதிகளை மீறி வனப்பகுதி நிலத்தை ஒதுக்குவதற்கு அனுமதி அளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சராக ஜெயந்தி நடராஜன் கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாரண்டா வனப்பகுதி நிலம், எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்துக்கு சுரங்கத் தொழில் மூலம் இரும்புத்தாது வெட்டியெடுப்பதற்காக விதிகளை மீறி ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுத்தது. முன்னதாக, அந்த வனப்பகுதி நிலத்தை ஒதுக்குவதற்கான ஒப்புதலை சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் வழங்க மறுத்திருந்தார். எனினும், அவருக்குப் பின் இத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயந்தி இதற்கான ஒப்புதலை அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, சாரண்டா வனப்பகுதி நில ஒதுக்கீடு குறித்து சிபிஐ கடந்த 2014-இல் முதல் கட்ட விசாரணையை நடத்தியது.
அந்த விசாரணையில் மேற்கண்ட நில ஒதுக்கீடு தொடர்பாக எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்துக்கும் ஜார்க்கண்ட் அரசுக்கும் இடையே கடந்த 2004-இல் ஒப்பந்தம் கையெழுத்தானது தெரிய வந்தது. அதன் பின், ஆண்டுக்கு ஒரு டன் இரும்புத்தாது என்ற உற்பத்தித்திறன் 2007-இல் ஆண்டுக்கு மூன்று டன் இரும்புத்தாது என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, இரும்புத்தாது எடுப்பதற்காக எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்துக்கு 192 ஹெக்டேர் நிலத்தை குத்தகைக்கு ஒதுக்குமாறு ஜார்க்கண்ட் அரசு கடந்த 2006-இல் மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அப்போது, இந்த ஒப்புதலை அளிப்பதற்கு முன் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய சுரங்கத்துறை தெரிவித்தது.
அதன் பின், மேற்கண்ட 192 ஹெக்டேர் நிலத்தில் 55.79 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை வனம் அல்லாத பயன்பாட்டுக்கு ஒதுக்க ஒப்புதல் அளிக்குமாறு ஜார்க்கண்ட் மாநில அரசு கடந்த 2008இல் மத்திய அரசிடம் கோரியது.
இந்தக் கோரிக்கையை இரண்டு முறை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் வன ஆலோசனைக் குழு (எஃப்ஏசி), அதை நிராகரித்தது. ஏனெனில், சுரங்கத் தொழில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடமானது சிங்பூம் யானைகள் சரணாலயத்தின் ஒரு பகுதி என்பதும் வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அந்தப் பகுதி அவசியம் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாநில அரசின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரம் அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷின் கவனத்துக்குச் சென்றது. எனினும், சிங்பூம் யானைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நிலம் இருந்தால், அதை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒதுக்குவது குறித்து மறுபரிசீலனையே தேவையில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கடந்த 2010, ஏப்ரல் 23-இல் முடிவு செய்தார். மேலும், அப்பகுதியில் சுரங்கத் தொழில் நடத்த ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனைத்து ஒப்புதல்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தனது குறிப்பில் தெரிவித்திருந்தார்.
அதன் பின், எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனம் மேற்கண்ட நில ஒதுக்கீட்டுக்கான அப்போதைய பிரதமரை (மன்மோகன் சிங்) அணுகி, சுற்றுச்சூழல் துறையின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியது. அதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை மீண்டும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் அப்போதைய முதன்மைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயலாளரைக் கேட்டுக் கொண்டார்.
இதையேற்று, மேற்கண்ட நில ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் பரிசீலிக்குமாறு வன ஆலோசனைக் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த அக்குழு மேற்கண்ட கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய தகவல்கள் ஏதும் தனது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று அக்குழு தெரிவித்தது.
ஜெய்ராம் ரமேஷுக்குப் பிறகு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பதவியேற்றார். அவரிடம், எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்துக்கு மேற்கண்ட வனப்பகுதி நில ஒதுக்கீட்டுக்கான கோரிக்கையை யதார்த்த ரீதியில் பரிசீலிக்குமாறு அன்றைய ஜார்க்கண்ட் முதல்வர் கேட்டுக் கொண்டார். இதற்கான கோப்பு ஜெயந்தி நடராஜனுக்கு 2011, ஆகஸ்ட் 26-இல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் அவரிடம் நிலுவையில் இருந்தபோது, அவரை எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த உமங் கேஜரிவால் 2011, செப்டம்பர் மாதம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அது தொடர்பான கோப்பில் ஜெயந்தி குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், யானைகள் சரணாலயப் பகுதியில் சுரங்கத் தொழில் மேற்கொள்வது பற்றி ஜார்க்கண்ட் மாநில அரசிடம் இருந்து அறிக்கை ஏதாவது வந்ததா? என்று கேட்டிருந்தார்.
அவர் கோரியிருந்த தகவலின்பேரில் இவ்விவகாரம் மீண்டும் ஜெயந்தியின் கவனத்துக்குச் சென்றது. அப்போது, இந்த விவகாரத்தை வன ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு அவரிடம் மத்திய வனத்துறையின் இயக்குநர் ஆலோசனை தெரிவித்தார்.
எனினும், அவ்வாறு வன ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்கு இந்த விவகாரத்தை அனுப்பாமல் சம்பந்தப்பட்ட 55.79 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை சுரங்கத் தொழில் நடத்த அனுமதிக்கும் உத்தரவை ஜெயந்திர நடராஜன் 2012, பிப்ரவரி 4-ஆம் தேதி பிறப்பித்தார்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் சிபிஐ நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தன. இவை, ஜெயந்திக்கும், உமங்க் கேஜரிவாலுக்கும் இடையே நடைபெற்ற குற்றவியல் சதியையும், அமைச்சர் பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதையும் அம்பலப்படுத்துவதாக சிபிஐ தெரிவித்தது.
இந்நிலையில், விதிகளை மீறி இந்த வனப்பகுதி நிலத்தை சுரங்கத்தொழிலுக்கு ஒதுக்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது தொடர்பாக ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த உமங் கேஜரிவால், அந்த நிறுவனம் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. "அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விதிகளை மீறி 55.79 வனப்பகுதி நிலத்தை சுரங்கத் தொழிலுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்தார். வனத்துறை இயக்குநரின் ஆலோசனை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவற்றுக்கு மாறாக இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது' என்று சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, ஜெயந்தி நடராஜனின் சென்னை இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர். இது தவிர, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுக்குச் சொந்தமாக தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களிலும், ஒடிஸாவின் சுந்தர்கர் நகரில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகத்திலும் அதிரடிச்சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com