பள்ளி சீருடை அணியாத மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்கவைத்து தண்டித்த ஆசிரியர்

பள்ளிகளில் நடக்கும் அநேக மோசமான சம்பவங்களில், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளி சீருடை அணியாத மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்கவைத்து தண்டித்த ஆசிரியர்

ஹைதராபாத்: பள்ளிகளில் நடக்கும் அநேக மோசமான சம்பவங்களில், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் 11 வயது மாணவியை ஆண்கள் கழிப்பறையில் நிற்க வைத்து உடற்கல்வி ஆசிரியர் தண்டித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது நான்காம் வகுப்பு மாணவியின் பெற்றோர், மாணவியின் பள்ளி சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை மாணவியின் தனிக்குறிப்பு நோட்டில் (டைரி) பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவியை கண்ட உடற்கல்வி ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். அம்மாணவி நடந்ததை கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியுள்ள விளக்கத்தையும் காட்டியுள்ளார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ஆசிரியர், சத்தம்போட்டதுடன் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இழுத்து சென்று மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.

இதனை பார்த்த சக மாணவர்கள் அந்த மாணவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு உடற்கல்வி ஆசிரியர், மாணவியை வகுப்பிற்கு செல்ல அனுமதித்தார். மற்ற ஆசிரியர்களுடனும் தனக்கு நடந்தது குறித்து மாணவி தெரிவித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், தான் கழிவறையில் நிற்கும்போது அனைத்து மாணவர்களும் தன்னைப்பார்த்து சிரித்ததாகவும், இது மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அந்த பள்ளிக்கு மீண்டும் நான் செல்லமாட்டேன் எனவும் பாதிக்கப்பட்ட மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் வழக்கு பதிவு செய்து உடனடியாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள், பல பாலியல் உரிமை ஆர்வலர்கள், பாலியல் குற்றங்களை எதிர்த்துப் போராடுவோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com