கௌரி லங்கேஷ் படுகொலை: ஒரே புள்ளியில் நிற்கும் விசாரணை? துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரிக்கும் காவல்துறை தனிப்படையினர், குற்றவாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் திணறி வருகிறார்கள்.
கௌரி லங்கேஷ் படுகொலை: ஒரே புள்ளியில் நிற்கும் விசாரணை? துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்


பெங்களூர்: கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரிக்கும் காவல்துறை தனிப்படையினர், குற்றவாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் திணறி வருகிறார்கள்.

கர்நாடகாவில், எம்எம் கல்புர்கி, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர், கோவிந் பன்சாரே ஆகியோர் படுகொலை வழக்குகளை விசாரித்து வரும் 4 காவல்துறை தனிப்படைகளுமே, வீட்டுக்கு வெளியே படுகொலைகள் நடந்ததால், கொலையாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் விசாரணை ஒரே புள்ளியில் சிக்கிக் கொண்டுள்ளன.

தடயவியல் துறையின் நிபுணர் ஒருவர், குற்றம் நடந்த 4 இடங்களையும் நேரில் ஆய்வு செய்து, ஏன் ஒரு தடயம் கூட சிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, 4 கொலைகளும், கொல்லப்பட்டவர்களின் வீட்டு வாயிலில் நடந்துள்ளது. இந்த 4 கொலைகளுமே ஒரே மாதிரி, ஒரே விதத்தில் நடத்தப்பட்டுள்ளன. கொலைசெய்யும் நோக்கத்தோடு சம்பவ இடத்துக்கு வந்து, படுகொலையை நிகழ்த்திவிட்டு தப்பியுள்ளனர் குற்றவாளிகள். இதனால் அவர்களது கைரேகையோ அல்லது சிறு தடயத்தையோ அவர்கள் விட்டுச் செல்லவில்லை. சம்பவப் பகுதியில் அவர்கள் எதையுமே தொடவில்லை. குறிப்பாக கொலை செய்யப்பட்ட நபரைக்கூட. இதில் கல்புர்கி வழக்கில், கொலையாளிகள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனாலும் அவர்களது கைரேகை பதிவாகவில்லை என்கிறார்.

ஒரு கொலை, வீட்டுக்குள் நடக்கும் போது, அங்கு கிடைக்கும் தடயங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் காவல்துறைக்குக் கிடைத்து விடும். ஆனால், திறந்தவெளியில் கொலை நடக்கும் போது, குற்றவாளியின் தலை முடி, சொட்டும் ரத்தம், காலடி தடம், என அனைத்துமே அக்கம் பக்கத்தினர் கொலைக்குள்ளானவரை சூழ்ந்து கொள்ளும்போது அழிக்கப்பட்டுவிடுகிறது. 

நான்கு கொலைகளிலுமே கொலையுண்டவருக்கு கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்கவோ அவர்களைத் தடுக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முறை சுடப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷ் கொலையில் சிசிடிவி காட்சியாவது கிடைத்துள்ளது. மற்றவர்களின் கொலையில் அதுவும் இல்லை.

மோப்ப நாயின் உதவியை ஏன் நாடவில்லை?
கௌரி லங்கேஷ் கொலையில், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாயின் உதவியை பயன்படுத்த வேண்டாம் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் நினைத்தனர். அதாவது, கொலையாளிகளின் வாசனையை மோப்ப நாயால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதே தடயவியல் நிபுணர்களின் கருத்தும். 

ஆனால், இது தவறு என்றும், மோப்ப நாய்கள் நிச்சயம் கொலையாளிகளின் வாசனையை கண்டுபிடித்திருக்கும் என்றும் ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

அதே போல, கொலையாளிகள் சம்பவ இடத்தில் செல்பேசியும் பயன்படுத்தவில்லை.

தற்போதைய நிலையில், தனிப்படையினர், கொலையாளிகளின் வாகனங்கள் எந்தெந்த பகுதிகளில் பயணித்தது என்பது குறித்து விசாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்புக் குழுவினர், மற்ற கொலைகளை விசாரிக்கும் குழுவினருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர். இதில், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழுவும் இவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com