ஆதார் இணைக்காத சிம்கார்டுகளின் சேவைகள் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு துண்டிப்பு: மத்திய அரசு

ஆதார் விவரத்தை இணைக்காத சிம்கார்டுகளின் சேவைகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு துண்டிப்பது தொடர்பான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஆதார் இணைக்காத சிம்கார்டுகளின் சேவைகள் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு துண்டிப்பு: மத்திய அரசு

ஆதார் விவரத்தை இணைக்காத சிம்கார்டுகளின் சேவைகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு துண்டிப்பது தொடர்பான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக லோக்நீதி அறக்கட்டளை எனும் அமைப்பால் தொடுக்கப்பட்ட வழக்கின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சிம்கார்டுகளுடன் ஆதார் விவரம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, புதிதாக விற்பனை செய்யப்படும் சிம்கார்டுகள் அனைத்தையும் ஆதாரை அடிப்படையாகக் கொண்டே செல்லிடப்பேசி நிறுவனங்கள் அளித்து வருகின்றன. அதுபோல், ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் சிம்கார்டுகளுக்கு ஆதாரை இணைப்பது தொடர்பான குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சலை செல்லிடப்பேசி நிறுவனங்கள் அனுப்பி வருகின்றன. எனினும், இதுகுறித்த செய்தி மக்களை அதிகம் சென்றடையாத காரணத்தினாலும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், கோடிக்கணக்கான சிம்கார்டுகளில் ஆதார் விவரம் இன்னமும் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், ஆதார் விவரத்தை இணைக்காத சிம்கார்டுகளின் சேவையைத் துண்டிப்பது தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த தீர்ப்பில், ஓராண்டுக்குள் ஆதார் விவரத்தை சிம்கார்டுகளில் பதிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை, பிப்ரவரி மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதன்படி, ஆதார் இணைக்காத சிம்கார்டுகளின் சேவை பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு துண்டிக்கப்படும். இதனால், போலியான அடையாள அட்டையைக் கொடுத்து சிம்கார்டுகள் பெற்று இனி யாரும் மோசடி செய்ய முடியாது. குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோர் தங்களது செயல்களுக்கு சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினாலும் அவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு விடுவர்.
சிம்கார்டுகளில் ஆதாரை இணைக்கும்போது சேகரிக்கப்படும் தகவலை, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பில்லை. அந்தத் தகவலை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சேமிக்க முடியாது. அதேபோல், ஆதாரில் இருக்கும் பிற விவரங்களை அந்நிறுவனங்களால் சேகரிக்க முடியாது.
ஆதார் பதிவின்போது, சம்பந்தப்பட்ட நபரின் கைவிரல் ரேகை சேகரிக்கப்பட்டு, அதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் அனுப்பி வைக்கும். அதை அந்த ஆணையம் சரிபார்த்து சேமிக்கும். இதை மீறி, ஆதார் தகவலை தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் சேமித்து வைப்பது தீவிர குற்றமாகக் கருதப்படும். குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், 2016-ஆம் ஆண்டு ஆதார் சட்டப்படி 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com