பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த ஆண்டு துல்லியத் தாக்குதல் நடத்தியது எப்படி? என்பது குறித்த தகவல்கள் புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த ஆண்டு துல்லியத் தாக்குதல் நடத்தியது எப்படி? என்பது குறித்த தகவல்கள் புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி துல்லியத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் 35 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஷிவ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் எழுதியுள்ள புதிய புத்தகத்தில், பயங்கரவாதத் தாக்குதல் குறித்த புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய ராணுவத்தின் 14 சாகசக் கதைகள் இடம்பெற்றுள்ள அந்தப் புத்தகத்தில், துல்லியத் தாக்குதல் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடியில், பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஐபி, ரா போன்ற உளவு அமைப்புகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், துல்லியத் தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டு, பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. துல்லியத் தாக்குதல் நடத்தும் குழுவின் தலைவராக, ராணுவ மேஜர் மைக் டேங்கோ நியமிக்கப்பட்டார். அவர் தனக்குத் தேவையான தகுதியான வீரர்களைத் தேர்வு செய்தார்.
மேலும், உரி ராணுவத் தலைமையகம் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய பிறகு, வீரர்களைப் பத்திரமாக திரும்ப அழைத்து வர வேண்டும் என்ற கவலை தனக்கு அதிகம் இருந்ததாக மேஜர் டாங்கோ கூறுகிறார்.
பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்புடன், அந்நாட்டு உளவு அமைப்பு இயக்கி வந்த 4 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கு முன்பே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 2 கிராமவாசிகள், 2 பாகிஸ்தானியர்கள் என 4 பேரிடம் இருந்து அவ்வப்போது தகவல் பெறப்பட்டது. அவர்கள், பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை உறுதி செய்து தகவல் அளித்தனர். அடுத்ததாக, வீரர்களுக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் முடிவு செய்யப்பட்டன.
ஒவ்வொரு முகாமும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் முன், அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருந்தது. மேலும், தகவல்களை எளிதில் பரிமாறிக் கொள்ளும் வகையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளுக்கு அருகருகே முகாம்கள் இருந்தன. துப்பாக்கிச் சண்டை தொடங்கி, ஒரு மணி நேரத்தில் தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது.
3 குழுக்களாகப் பிரிந்த ராணுவ வீரர்கள், 4 பயங்கரவாத முகாம்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இதில், 38 பயங்கரவாதிகளும், 2 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இவை அனைத்தும் மிகவும் பரபரப்புடனும், மிகவும் துல்லியமாகவும் நடத்தப்பட்டன.
தாக்குதல் முடிந்த பிறகு, மாற்றுப் பாதையில் திரும்பி வர முடிவு செய்யப்பட்டது. அந்தப் பாதை மிகவும் கரடு முரடாக இருந்தது. இருப்பினும், அந்தப் பாதை பாதுகாப்பாக இருந்தது. திரும்பி வருகையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் சீறி வந்தன. ராணுவ வீரர்களுக்கு மிக நெருக்கமாக, அந்த குண்டுகள் கடந்து சென்றன. பல இடங்களில் தரையில் மரக்கட்டைகளைப் போல தரையில் படுத்து வீரர்கள் தப்பித்தனர். இறுதியில், அதிகாலை 4.30 மணியளவில், டாங்கோ தலைமயிலான இந்திய ராணுவக் குழு, நமது எல்லைக்குள் திரும்பியது என்று அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com