2019 தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டிக்கு முழுமையாகத் தயார்: ரெடியாகும் ராகுல் காந்தி! 

காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்கான போட்டிக்கு 2019 தேர்தலில் முழுமையாகத் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
2019 தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டிக்கு முழுமையாகத் தயார்: ரெடியாகும் ராகுல் காந்தி! 

பெர்க்லி: காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்கான போட்டிக்கு 2019 தேர்தலில் முழுமையாகத் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் இரண்டு வார கால சுற்றுப்பயணமாக தற்பொழுது அமெரிக்கா வந்துள்ளார். இங்கே அவர் பல்வேறு அரசியல் தலைவர்கள், சர்வதேச சிந்தனையாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்திக்கிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இன்று பெர்க்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 58 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது தாத்தா  ஜவஹர்லால் நேரு உரையற்றிய இடத்தில் அவர் இன்று கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கலந்துரையாடலில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவற்றின் தொகுப்பு பின் வருமாறு:

தொடர்ந்து என் மீது 'வாரிசு அரசியல்' தொடர்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர். ஆனால் இது இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளிலும் பொதுவாக உள்ள பிரச்சினைதான். இன்னும் நிறைய நாடுகளில் இப்படித்தான் நடைபெற்று வருகிறது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக இருப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 'நான் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிப்பது நன்றாக இருக்காது. ஏன் என்றால் அது கட்சியின் முடிவு. கட்சிதான் அதனை அங்கீகரிக்க வேண்டும். கட்சியின் உள் கட்டமைப்பு முறையிலுள்ள வழிகளின் படி அந்த தேர்வு நடைபெறும் என்று கூறியவர் தொடர்ந்து கேட்கப்பட்ட பொழுது 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்கான போட்டிக்கு தயார்' என்று தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், '2012-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அகந்தை வந்து சேந்து விட்டது. அதன் காரணமாக மக்களுடன் வெளிப்படையாக உரையாடுவது நின்று விட்டது. இதுவே தோல்விக்கு வித்திட்டது என்று தெரிவித்தார்.

மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீத இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவசரமாக அமல் படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.   

சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதையே முழுநேர வேலையாக கொண்ட, 1000 பேர் அடங்கிய  ஒரு தனி குழுவே மோடியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

காஷ்மீரைப் பொறுத்த வரை  காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்பொழுது தீவிரவாதம் அதிகரித்து இருக்கிறது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். 

கவுரி லங்கேஷ் படுகொலை பற்றிய கேள்விக்கு, 'வன்முறை என்ன செய்யும் என்பது எனக்குத் தெரியும். யாருக்கு எதிரானதாக இருந்தாலும் அது தவறு. வன்முறை நம்மை அழித்து விடும். மக்களை பிரித்தாளும் அரசியலானது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளுக்குப்பதில் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com