இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள்

இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகியுள்ளன.
தில்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹுதின் ரப்பானியை கைகுலுக்கி வரவேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தில்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹுதின் ரப்பானியை கைகுலுக்கி வரவேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகியுள்ளன. தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹுதீன் ரப்பானி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரப்பானி, தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை சந்தித்தார்.
அப்போது இருவரும், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தம் உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜும், ரப்பானியும் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்குத் தேவையான உதவியை அளிப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் உறவானது, நம்பிக்கையின் அடிப்படையிலானது ஆகும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகளின் புகலிடம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சந்தித்து வரும் போதிலும், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் ஒற்றுமையாக உள்ளன.
ஆப்கானிஸ்தானின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, புதிய வளர்ச்சிக் கூட்டணியை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.116 புதிய வளர்ச்சித் திட்டங்களை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம், சமூக-பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சியடையும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரப்பானி கூறியபோது, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு அளித்து வரும் உதவியை மேலும் அதிகரிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் நட்புறவானது, மூன்றாவது நாட்டுக்கு எதிரானது கிடையாது. வேறு எந்த நாட்டுக்கு எதிரான தந்திர நடவடிக்கையிலும் இருநாடுகளும் ஈடுபடவில்லை.
பயங்கரவாதம், வன்முறையால் ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் பாதிக்கப்பட்ட நாடுகளாகும். பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளால், இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிலவுகிறது என்று ரப்பானி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com