காஷ்மீர் நிலைமையில் முன்னேற்றம்: ராஜ்நாத் சிங்

கடந்த ஓராண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அமைதிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெளரி மாவட்டத்தின் நெளஷேரா செக்டாரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் திங்கள்கிழமை வீரர்களைச் சந்தித்து உரையாடிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெளரி மாவட்டத்தின் நெளஷேரா செக்டாரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் திங்கள்கிழமை வீரர்களைச் சந்தித்து உரையாடிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கடந்த ஓராண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அமைதிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நான்கு நாள் பயணமாக, கடந்த சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்ற அவர், அங்கு ஆளுநர், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
இந்தப் பயணத்தில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசினேன். அதன் பிறகு, காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். மாநிலத்தில் அனைத்தும் சரியாக உள்ளது என்று நான் வாதிடவில்லை. ஆனால், நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதியாக நம்புகிறேன்.
காஷ்மீரில் "அமைதி' என்ற பசுமையான மரம், பட்டுப்போய் விடவில்லை. காஷ்மீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் எவரையும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன். என்னுடன் பேச விரும்புவோர், நேரடியாக என்னைச் சந்திக்கலாம். எப்போதும் திறந்த மனதுடனே காஷ்மீருக்கு வருகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதல், பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதற்காகத்தான், பதவியேற்பு விழாவுக்கு அனைத்து அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும், மரபுகளை உடைத்தெறிந்து, பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு அவர் திடீர் பயணம் மேற்கொண்டார்.
பாகிஸ்தான் நிறுத்த வேண்டிய செயல்: நமது நண்பர்களை மாற்றிக் கொள்ள முடியும், ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறுவார். வாஜ்பாயாக இருந்தாலும், மோடியாக இருந்தாலும், பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தவே முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதற்கேற்ப பாகிஸ்தான் உரிய முறையில் நடந்துகொள்வதில்லை. மாறாக, எல்லை வழியாக ஊடுருவுவதற்கு பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வைக்கிறது. இத்தகைய செயலை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அமைதியை மீட்டெடுக்க முயற்சி: அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில், காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீது கடந்த வாரம் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது, அவரது மகளின் சோகம் நிரம்பிய முகம் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. அந்த முகத்தை என்னால் மறக்க முடியாது.
காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக பேசும்போது, பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. கருணை, தொடர்பு, ஒன்றிணைவு, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த மாநிலத்தின் பிரச்னக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்.
காஷ்மீர் மக்களின் கண்ணியத்துக்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கு எங்களுடைய முயற்சிகள் தொடரும்.
காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குவதற்குத் தடை விதிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35-ஏ பிரிவை ரத்து செய்வதற்காக, மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ரூ.80,000 கோடியில் வளர்ச்சித் திட்டம்: பிரதமரின் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் மாநிலத்துக்கு ரூ.80,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தேன். சில பணிகள்,பெரிய அளவில் உள்ளன. அவற்றுக்கான தொகை அதிகமாகிவிட்டது.
இதனால், திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. ஆனால் இந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.
அரசின் தலையீடு இல்லை: காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, தேசியப் புலனாய்வு அமைப்பு பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல.
தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பாகும். அது தனது கடமையைச் செய்கிறது. அதில் அரசின் பங்கு எதுவுமில்லை.
சுற்றுலாவை மேம்படுத்த சிறப்புத் திட்டம்: இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளிலும் இருந்தும் அனைவரும் காஷ்மீருக்கு சுற்றுலா வரவேண்டும். எனவே, காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தல்: சிலரின் தூண்டுதல்களுக்கு மாநில இளைஞர்கள் இணங்கிவிடக் கூடாது. கல்லெறியும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடக் கூடாது. பிரதமர் உள்பட நாங்கள் அனைவரும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறோம்.
சிறார் நீதிச் சட்டப்படி, இளைஞர்கள் சில தவறுகளைச் செய்திருந்தாலும், அவர்களை குற்றவாளிகளைப் போல பாதுகாப்புப் படையினர் நடத்தக் கூடாது. மேலும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும்போது, கூடுதல் படைகளைக் குவிப்பதை பாதுகாப்புப் படையினர் தவிர்க்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com