பள்ளியில் 7 வயது மாணவன் படுகொலை: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லி அருகே குருகிராமில் பள்ளியில் 7 வயது மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கும்
பள்ளியில் 7 வயது மாணவன் படுகொலை: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லி அருகே குருகிராமில் பள்ளியில் 7 வயது மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
சிறுவன் படுகொலை தொடர்பாக, சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் அவனது தந்தை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த பிரதுமன் தாக்கூர் (7), கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி கழிப்பறையில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக அந்த பள்ளி பேருந்து உதவியாளர் அசோக் குமார் கைது செய்யப்பட்டார். அச்சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி முதல்வர், பாதுகாப்பு ஊழியர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி பெற்றோர்கள் தொடர்ந்து 3 நாள்களாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து, தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில், அந்த சிறுவனின் தந்தை சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: இந்த மனு குறிப்பிட்ட ஒரு பள்ளியில் நிகழ்ந்த சம்பவத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த கவலையைத் தெரிவிப்பதாகும். இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழும்போது பள்ளி நிர்வாகத்துக்கு அதில் உள்ள பொறுப்புகள் குறித்து விதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் தெளிவாக வரையறுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசும், சிபிஎஸ்இ-யும் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com