காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கத் தயார்

காங்கிரஸ் கட்சி என்னைக் கேட்டுக் கொண்டால் நிர்வாகப் பொறுப்பை (தலைவர் பதவி) ஏற்கத் தயார் என்று துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அமெரிக்காவின் பெர்க்ளி நகரில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. 
அமெரிக்காவின் பெர்க்ளி நகரில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. 

காங்கிரஸ் கட்சி என்னைக் கேட்டுக் கொண்டால் நிர்வாகப் பொறுப்பை (தலைவர் பதவி) ஏற்கத் தயார் என்று துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பெர்க்ளி நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ராகுல் பேசியதாவது:
கடந்த 2004-இல் 10 ஆண்டு காலத்துக்காக நாங்கள் வகுத்த செயல்திட்டமானது மிகச் சிறப்பானதாக இருந்தது. ஆனால், 2010-11 காலகட்டத்துக்கு நாங்கள் வந்தபோது அந்தச் செயல்திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படவே இல்லை. 
கடந்த 2012-ஆம் ஆண்டு வாக்கில் காங்கிரஸ் கட்சியில் ஒரு குறிப்பிட்ட அதிகார மமதை ஏற்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து கட்சி மக்களுடன் கலந்துரையாடுவதையே நிறுத்தி விட்டது என்று ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, காங்கிரஸ் பொறுப்பில் நிர்வாகப் பொறுப்பை (தலைவர் பதவி) ஏற்க தாங்கள் விரும்புகிறீர்களா? என்று அவரிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் அளித்த பதில் வருமாறு:
நிர்வாகப் பொறுப்பை ஏற்க நான் நிச்சயமாக தயாராக இருக்கிறேன். எனினும், அந்த விவகாரத்தை எங்கள் கட்சியின் தேர்தல் நடைமுறைதான் முடிவு செய்யும். தற்போது அது நடைபெற்று வருகிறது. உள்கட்சித் தேர்தல் மூலம் நாங்கள் சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள்தான் தலைமைப் பொறுப்பு குறித்து முடிவு செய்கிறார்கள். எனவே, தலைமைப் பொறுப்பு குறித்த முடிவு என்னுடையது என்று கூறுவது முறையாக இருக்காது என்று ராகுல் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவற்றையே பாஜக தற்போது அமல்படுத்தி வருகிறது. நாங்கள் வகுத்த செயல்திட்டங்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர். 
இந்தியாவில் மகாத்மா காந்தியின் அகிம்சை சிந்தனை தற்போது தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. மக்கள் ஒருங்கிணைய அச்சிந்தனை வழிவகுத்துள்ளது.
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை: அமெரிக்காவுடனான உறவுகள் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் இந்தியாவை தனிமைப்படுத்தக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அந்த நிலைமைக்கு அவர்கள் இந்தியாவைத் தள்ளுகின்றனர். நீங்கள் நேபாள விவகாரங்களைப் பார்த்தால் அங்கு சீனா நுழைந்துள்ளது தெரிய வரும். இலங்கை, மாலத்தீவுகள் ஆகியவற்றில் நடப்பதைக் கவனித்தால் அங்கும் சீனாவின் ஆதிக்கம் உள்ளது புலனாகும்.
காஷ்மீர் விவகாரம்: ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பிடிபி) பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என்று மோடி எடுத்த முடிவு மிகவும் தவறானது.
காஷ்மீர் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவதில் முக்கிய கருவியாக பிடிபி கட்சி இருந்தது. ஆனால் அக்கட்சியுடன் பாஜகவிற்கு மோடி கூட்டணியை ஏற்படுத்திய நாளில் இருந்து அக்கூட்டணி, பிடிபி-யைச் சிதைத்து விட்டது.
இந்தக் கூட்டணியை மோடி உருவாக்கிய நாளிலேயே, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அவர் இடமளித்து விட்டார். 
காஷ்மீர் நிலைமையை மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் இணைந்து பணியாற்றினேன். அப்போது அந்த மாநிலத்தில் பயங்கரவாதம் குறைந்ததோடு, சுற்றுலாவும் மேம்பட்டிருந்தது என்றார் ராகுல் காந்தி.
வாரிசு அரசியல்
வாரிசு அரசியலுடன் காங்கிரஸ் அதிகமாக சம்பந்தப்பட்டுள்ளதா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் கூறியதாவது:
இந்தியாவை வம்ச வாரிசு அரசியல்தான் நடத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளில் இந்தப் பிரச்னை உள்ளது. அகிலேஷ் யாதவ் வாரிசு அரசியல் தலைவர்தான். மு.க.ஸ்டாலின் வாரிசு அரசியல் பிரமுகர்தான். அவ்வளவு ஏன், திரையுலகில் உள்ள அபிஷேக் பச்சனும் வாரிசுதான். இந்தியாவே அப்படித்தான் இயங்குகிறது.
வாரிசு நடைமுறை அடிப்படையில்தான் அம்பானி குடும்பத்தினர் வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் அதுதான் நடக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் குடும்பங்களைச் சேராத ஏராளமானோர் இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வாறு கோலோச்சும் வாரிசுகள் குறித்து என்னால் பெயர்களைக் குறிப்பிட்டே கூற முடியும். சிலரது தந்தை, பாட்டி அல்லது தாத்தா ஆகியோரும் அரசியலில் உள்ளனர். எனவே, தலைமைப் பொறுப்புக்கு வருபவர் திறமையான நபரா? மக்களின் பிரச்னைகள் குறித்து புரிந்து கொள்ளும் நபரா? என்பதுதான் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com