பள்ளியில் சிறுவன் கொலை எதிரொலி: மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ஜாவடேகர் ஆலோசனை

பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மத்திய மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர்

பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மத்திய மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் தில்லியில் திங்கள்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர்.
தில்லி அருகே குருகிராமில் உள்ள பள்ளியில் சில நாள்களுக்கு முன்பு 2-ஆம் வகுப்பு மாணவன், பள்ளிப் பேருந்து உதவியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இது தவிர தில்லி ஷாதராவில் தனியார் பள்ளியில் பியூன் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் நடத்திய உயர் நிலைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கேந்திரீய வித்யாலயா சங்கேதன், தேசியக் கல்வி, ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், பள்ளிகளில் மாணவ, மாணவியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் இணைந்து இது தொடர்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உள்ளன.
பள்ளியில் பேருந்து உதவியாளர், பள்ளிப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகிய பணிகளுக்கு பெண்களை நியமிக்கலாம் என்று அமைச்சர் மேனகா காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தவிர பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பிற பணிகளில் நியமிக்கப்படுபவர்கள் தொடர்பாக பல்வேறு புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டுமென்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com