இந்திய - ஜப்பான் உறவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்: புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி மோடி பேச்சு

ஆமாதாபாத்தில் தொடங்க உள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன்  இணைந்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்திய - ஜப்பான் உறவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்: புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி மோடி பேச்சு


ஆமாதாபாத்: ஆமாதாபாத்தில் தொடங்க உள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன்  இணைந்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஜப்பான் கடனுதவியுடன் இந்தியாவில் தொடங்கப்படும் புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று சிறப்பு விமானம் மூலம் குஜராத் வந்து சேர்ந்தார்.

இன்று காலை ஆமாதாபாத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று மோடியுடன் இணைந்து புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆமாதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது, இந்திய-ஜப்பான் உறவில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். புல்லட் ரயில் திட்டத்துக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் சேவைக்கு ஜப்பான் அரசு 88 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கிறது.

இந்தியா - ஜப்பான் இடையே வலுவான நல்லுறவு நீடிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மோடி பேசினார்.

மேலும், சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காத திட்டம் புல்லட் ரயில் திட்டம் எனவும், புல்லட் ரயில் திட்டத்தில் தனிப்பட்ட முறையில் ஷின்சோ அபே ஆர்வம் காட்டுவதாகவும், இந்த திட்டத்தில் எந்த குறையும் இருக்காது என்று அவர் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மொத்த வழித்தடத்தில் 92 சதவீத வழித்தடம் உயர்மட்ட மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும். இதில் 7 கி.மீ. தூரம் கடலுக்கு கீழே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது என்றும் மோடி கூறினார்.

விழாவில் பேசிய ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே, நவீன இந்தியாவை வடிவமைக்க பிரதமர் மோடி பாடுபடுவதாக பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டம் வரும் 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆமதாபாத் நகரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள மும்பை நகரை 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com