இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்களை நிறைவேற்றித் தர தயார்: சீனா அறிவிப்பு

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டங்களை நிறைவேற்றித் தர தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டங்களை நிறைவேற்றித் தர தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதில் முதல்கட்டமாக, ஜப்பானின் உதவியுடன் மும்பை-ஆமதாபாத் இடையே ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில், இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் கூட்டாக வியாழக்கிழமை அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைக்கவுள்ளனர்.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங்கிடம், மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில், அதிவேக ரயில் திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு சீனா ஆர்வமாக உள்ளது. பிராந்திய வளர்ச்சிக்காக, இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு சீனா தயாராக உள்ளது.
ரயில்வேத் துறையை பொறுத்தமட்டில், இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்பில் அதுவும் ஒரு பகுதிதான். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. புல்லட் ரயில் தொடர்பாகவும், தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் இருநாடுகளைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று கெங் சுவாங் கூறினார்.
முன்னதாக, சீன அரசு தங்களது புல்லட் ரயில் திட்டத்தை பிற நாடுகளில் செயல்படுத்துவதற்கு தீவிர ஆர்வம் காட்டியது. இந்தியாவில் புல்லட் ரயில் தொடர்பான ஒப்பந்தத்தை பெறுவதற்கும் தீவிர முயற்சி மேற்கொண்டது. தில்லி முதல் சென்னை வரையிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தை சீனா முன்வைத்தது. ஆனால், என்ன காரணத்துக்காகவோ, அந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
ரயில்வே மேம்பாடு தொடர்பாக இந்தியா-சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்கீழ், சீனாவில் இந்திய ரயில்வே பொறியாளர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பதற்கும் சீனா ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்தியாவில் சில ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வேயாக சீனா கருதப்படுகிறது. பயண நேரத்தை குறைக்கும் வரையில், சீனாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் அதிவேக ரயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com