லாலு கட்சியில் சேருவதை தவிர சரத் யாதவுக்கு வேறு வழியில்லை: ஐக்கிய ஜனதா தளம் விமர்சனம்

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியில் (ஆர்ஜேடி) சேருவதைத் தவிர, ஐக்கிய ஜனதா தள அதிருப்தித் தலைவர் சரத் யாதவுக்கு வேறு வழியில்லை

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியில் (ஆர்ஜேடி) சேருவதைத் தவிர, ஐக்கிய ஜனதா தள அதிருப்தித் தலைவர் சரத் யாதவுக்கு வேறு வழியில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி விமர்சித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உரிமை கோரி, சரத் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நிராகரித்து விட்டது. இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறியதாவது:
அரசியலில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆர்ஜேடி கட்சியில் சேருவதைத் தவிர, சரத் யாதவுக்கு இனி வேறு வழியில்லை. ஆதலால், ஆர்ஜேடி கட்சியில் அதிகாரப்பூர்வமாக சரத்யாதவ் சேர வேண்டும். அக்கட்சியின் தேர்தல் சின்னமான விளக்கை தனது சின்னமாக அவர் தாமதமின்றி ஏற்க வேண்டும். லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு சரத் யாதவ் தற்போது உறவினராகி (மாமா) விட்டார்.
சரத் யாதவ், அலி அன்வர் ஆகியோரது எம்.பி. பதவிகளை ரத்து செய்யும்படி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து, அவர்கள் 2 பேரிடமும் விளக்கம் கேட்டு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடந்த திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளார். எனவே, மாநிலங்களவை எம்.பி. பதவியையும் சரத் யாதவ் இனிமேல் இழக்க வேண்டியதுதான் என்று நீரஜ் குமார் தெரிவித்தார்.
பிகாரில் பாஜகவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் ஆட்சியமைத்ததை சரத் யாதவ் வெளிப்படையாக விமர்சித்தார். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைக்காக மாநிலங்களவை கட்சி எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவை நிதீஷ் குமார் நீக்கினார்.
தில்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில், நிதீஷ் குமார் எதிர்ப்பை மீறி ஐக்கிய ஜனதா தள எம்.பி. அலி அனவர் கலந்து கொண்டார். இதையடுத்து, கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்து நிதீஷ் குமார் உத்தரவிட்டார். இதுபோன்ற சூழ்நிலையில், லாலு பிரசாத் கூட்டிய எதிர்க்கட்சி பேரணியில் சரத் யாதவ் கலந்து கொண்டார். இதனால், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் சரத் யாதவ், அலி அன்வர் ஆகியோரது எம்.பி. பதவிகளை பறிக்கக்கோரி, வெங்கய்ய நாயுடுவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக, சரத் யாதவ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்றும், ஆதலால் கட்சி சின்னத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், நிதீஷ் குமார் தரப்பிலும் தனியாக மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com