பாரத ஸ்டேட் வங்கியால் சிறுசேமிப்பை இழந்த மாணவர்கள்: ஃபெனால்டியால் பணமிழந்த அவலம்

மும்பை புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கில் இருந்த சிறுசேமிப்பு பணத்தை அந்த வங்கி விதிகளால் மாணவர்கள் இழந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியால் சிறுசேமிப்பை இழந்த மாணவர்கள்: ஃபெனால்டியால் பணமிழந்த அவலம்

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது பாரத ஸ்டேட் வங்கி. இதற்கு இந்தியாவின் அனைத்து கிராமங்கள் வரையிலும் கிளைகள் உண்டு. இதன்காரணமாகவே படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இவ்வங்கியில் தங்கள் பணத்தை சேமித்து வந்தனர். 

இந்நிலையில், மும்பையின் புறநகரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் தங்களின் வங்கிக் கணக்கில் இருந்த சிறுசேமிப்பு பணத்தை பள்ளி மாணவர்கள் இழக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. 

தற்போது, பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிகளின் படி நகர்புறப் பகுதிகளில் சேமிப்புப் கணக்கில் குறைந்தபட்சத் தொகையாக ரூ.5,000 கட்டாயம் இருக்க வேண்டும். கிராமப்புறம் என்றால் அதற்கு ஒரு தொகை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்சத் தொகை அளவுக்கு கீழ் சேமிப்பு சரிந்தால் அதற்கு ஏற்றாற்போல் ஃபெனால்டி விதிக்கப்படுகிறது. தனியார் பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே இருந்து வந்த இதுபோன்ற சேவைக் கட்டணங்கள் தற்போது அரசு பொதுத்துறை வங்கியில் செயல்படுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மும்பை புறநகர் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவர்களுக்கு சிறுசேமிப்பின் பலனை கற்றுத்தரும் வகையிலும், வங்கிப் பணப்பரிவர்தனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டியும் அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் சிறுகச்சிறுகச் சேமித்து வந்தனர். இதனிடையே அந்த சேமிப்புக் கணக்கில் இருந்து அனைத்து பணமும் எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத அந்தப் பெற்றோர்கள் நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது புதிய விதிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச சேமிப்புக் கணக்கு இல்லாத காரணத்தால் ஃபெனால்டி வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 மாணவர்களின் வங்கிக் கணக்கில் இருந்தும் மொத்தத் தொகையும் சேவைக் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு இந்தச் சேமிப்பு கணக்குத் தேவையில்லை எனில் அதனை உடனடியாக மூடிவிடும் படி அந்த வங்கிக் கிளை வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அந்த மாணவர்களுக்கு சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக வங்கிக் கணக்கு துவக்கித் தந்த ஆசிரியர் மன்னிப்புக் கோரியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜூன் 2017 வரை இதுபோன்ற சேவைக் கட்டணம் மூலமாக ரூ. 235 கோடி பாரத ஸ்டேட் வங்கித் தரப்பில் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com