கௌரி லங்கேஷ் கொலை: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி ஷீடர் குனிகல் கிரியிடம் விசாரணை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌரி லங்கேஷ் கொலை: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்


பெங்களூர்: மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி ஷீடர் குனிகல் கிரியிடம் விசாரணை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஷீடர் குனிகல் கிரி, பல்லாரி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்த கொலை சம்பவம் குறித்து கிரிக்கு முன்னமேயே தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் அடைந்த சிறப்பு விசாரணைக் குழு, சிறையில் அவனிடம் விசாரணை நடத்தியுள்ளது.

அதே சமயம், பிகாரில் இருந்து சட்ட விரோதமாக பெங்களூருவில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவத்துக்கும், கௌரி லங்கேஷ் கொலைக்கும் சம்பந்தம்  இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கௌரி லங்கேஷ் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கொலையில் ஈடுபட்டவன் தொழில்முறை கொலையாளி அல்ல என்றும், ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவன் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

2015ம் ஆண்டு நடந்த சமூக ஆர்வலர் கல்புர்கி கொலையில் ஈடுபட்டவன் தொழில்முறை கொலையாளி  என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொலையாளி, கொலை செய்த தினத்தன்று, கௌரி லங்கேஷ் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கொலையில் ஈடுபடுவதற்கு முன்பு குறைந்தது 2 முறை, கௌரியின் வீட்டுக்கு அருகே கொலையாளி வந்துள்ளான். ஆனால், அவன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மங்களூரு, சிக்கமங்களுரு, பெங்களூர், ஸ்ரீங்கேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இரண்டு கொலைகளில் ஒரே ரகத் துப்பாக்கி
தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், சமூக ஆர்வலர் கல்புர்கி கொலையிலும், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரே ரக துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட ஆய்வாளர் எம்எம் கல்புர்கி கொலையில் பயன்படுத்தப்பட்டதும், கௌரி லங்கேஷ் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களும், கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கேட்ரிட்ஜ்களையும் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு கொலைகளிலும் 7.65 மி.மீ. அளவு கொண்ட நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com