சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் கர்நாடக அரசியல் கட்சிகள்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் கர்நாடக அரசியல் கட்சிகள்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மதச் சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக கட்சிகள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மதச் சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக கட்சிகள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
ஆட்சியை மீண்டும் தக்கவைக்க காங்கிரஸýம், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் துடிப்பில் பாஜகவும், இருபெரும் தேசிய கட்சிகளை வீழ்த்தி மாநில அடையாளத்துடன் ஆட்சியில் அமர மஜதவும் பல்வேறு பிரசார திட்டங்களை வகுத்துச் செயலாற்றி வருகின்றன.
பாஜக: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலைமை, மத்திய பாஜகவின் ஆட்சியின் சாதனைகளை மையமாக வைத்து பிரசார வியூகத்தை அமைத்திருக்கும் கர்நாடக பாஜக தலைவர்கள், முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்க்க "மாற்றத்திற்கான பயணம்' என்ற பிரசார திட்டத்தை நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.
75 நாள்களுக்கு நடக்கவிருக்கும் இந்த பயணம், 224 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கடந்து செல்லவிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் நடக்கவிருக்கும் இந்த பயணத்தில் பாஜகவின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த பயணத்தின் போது வீடுவீடாக தொண்டர்கள் சென்று முதல்வர் சித்தராமையா ஆட்சியின் தோல்விகளையும், பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிடவிருக்கிறார்கள். 75 நாள்கள் பயணத்தின்போது நடக்கவிருக்கும் 7 பேரணிகளில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து தனித்தனியே பேரணிகள் நடத்தப்படவிருக்கின்றன. அடுத்துவரும் 8 மாதங்களில் மக்களின் மனங்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திருப்பிவிட பாஜக திட்டமிட்டுள்ளது.
குஜராத்தை காட்டிலும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கும் பாஜக, எந்த காரணத்தை முன்னிடும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை நிலைக்கவிட்டால், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி துளிர்க்க உதவியாக இருந்துவிடும் என்று பாஜக அஞ்சுகிறது.
அடுத்தடுத்த மாதங்களில் கர்நாடகத்தில் முகாமிடவிருக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பிரசார திட்டங்களை நேரடியாக கண்காணித்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெறவிருக்கும் வெற்றி, தேசிய அளவில் கட்சியைப் பலப்படுத்தவும், பாஜகவை பலவீனப்படுத்தவும் உதவும் என்று காங்கிரஸ் கருதுகிறது. குஜராத்தில் எளிதில் வென்றுவிடும் தைரியத்தில் இருக்கும் காங்கிரஸ், கர்நாடகத்தில் வெற்றியை ஈட்டுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்ந்து பாஜகவுக்கு எதிராக வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ள காங்கிரஸ், பாஜகவின் தேர்தல் வியூகங்களை முழுமையாக முறியடிக்க திட்டத்தை வகுத்துள்ளது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், பெங்களூரில் முகாமிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளைக் கவனித்துவருகிறார்.
ஆட்சிப் பணியில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஜி.பரமேஸ்வர், முழுநேரமும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். தேர்தல் பிரசாரம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்துவிவகாரங்களையும் தீவிரமாக அலசிவரும் பரமேஸ்வர், பாஜகவின் பிரசாரத்திற்கு எதிர்பிரசாரம் செய்ய "வீட்டுக்கு வீடு காங்கிரசின் நடை' என்ற பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று பிரசாரம் செய்ய காங்கிரஸ் முடிவுசெய்து, அதற்காக கையேட்டையும் தயார் செய்துள்ளது. பாஜகமுன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மக்களிடம் விளக்கமளிக்க இந்தவாய்ப்பைப் பயன்படுத்தவிருக்கிறது.
பாஜக பிரசாரம் செய்யும் தொகுதிகளில் முதல்வர் சித்தராமையா அரசின் சாதனைகளை விவரிப்பதோடு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் தோல்விகளையும் மக்களிடம் கொண்டுசெல்ல திட்டம் வகுத்துள்ளது. பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவைவரி திட்டங்களை ஏற்பட்டுள்ள இன்னல்களை மக்களிடம் விளக்க வாக்குச்சாவடி அளவிலான பிரசாரக் குழுக்களையும் காங்கிரஸ் அமைத்துள்ளது.
வாக்குச்சாவடி அளவில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். கர்நாடகத்தில் தங்கள் கட்சி வெற்றி பெறுவதை காட்டிலும் பாஜக வென்றுவிடக்கூடாதுஎன்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் அதற்கான பணிகளை மும்முரமாக ஆனால் சத்தமில்லாமல் செய்துவருகிறது.
மஜத: 2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் ஆட்சியை இழந்த மஜத, இழந்த அந்த வாய்ப்பை மீண்டும் கைப்பற்ற தொண்டர்களிடையே ஆசையை விதைத்துள்ளது. இனியும் ஆட்சியைக் கைப்பாற்றாவிட்டால் மஜதவின் அரசியல் இருப்பை உறுதி செய்ய முடியாது என்பதை அறிந்துள்ள அக்கட்சியின் தலைவர்கள் தேவெ கெளடாவும், குமாரசாமியும் கட்சியை தேர்தலுக்குத் தயார்ப்படுத்த கடுமையாக உழைத்துவருகிறார்கள். குமாரசாமியின் ஈராண்டு சாதனைகளை முன்வைத்து, இருபெரும் தேசிய கட்சிகளான மத்தியில் உள்ள பாஜக, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்ல 'வீட்டுக்குவீடு குமாரண்ணா' என்ற பிரசார திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
குமாரசாமி தனது ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வதோடு, கர்நாடகத்தின் நலனை பாதுகாக்க வேண்டுமென்றால் மாநில கட்சியான மஜதவுக்குதான் வாக்களிக்க வேண்டுமென்ற காரணத்தை மக்களிடம் விளக்கவிருக்கிறார்கள்.
224 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ள 120 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு வெற்றிபெற தகுதியான வேட்பாளரை அடையாளம் கண்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது மஜத, தனது அலுவலகத்தில் தினந்தோறும் கூட்டங்களால் சுறுசுறுப்பாக உள்ளது.
கிராமப்புறங்களில் தனக்கேயுரிய செல்வாக்கை பெற்றுள்ள மஜத, நகரங்களில் மக்களின் ஆதரவை பெற வியூகம் அமைத்து தனது பிரசாரத்தை சமூகவலைத்தளங்களில் பலப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com