பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைக்கப்படமாட்டாது: ராணுவத் தளபதி பி.எம்.ஹரீஷ்

டோக்கா லாம் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டு விட்டது என்பதற்காக இந்தியப் படைகள் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்திக் கொள்ளாது என்று தென் மண்டல ராணுவத் தளபதி பி.எம்.ஹரீஷ் தெரிவித்துள்ளார்.

டோக்கா லாம் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டு விட்டது என்பதற்காக இந்தியப் படைகள் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்திக் கொள்ளாது என்று தென் மண்டல ராணுவத் தளபதி பி.எம்.ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் ராணுவம் ஆயத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய - சீன - பூடான் எல்லையான டோக்கா லாம் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி சாலை அமைத்தது. இதை கடுமையாக எதிர்த்த இந்தியா, பூடானுக்குச் சொந்தமான எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்தது. இதனிடையே, அப்பகுதிக்குள் சீனா எல்லை தாண்டி தனது படைகளை ஊடுருவச் செய்தது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக டோக்கா லாம் எல்லையில் பெரும் பதற்றமும், போர்ச் சூழலும் நிலவியது. இந்நிலையில், இந்தியாவும், சீனாவும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு கண்டன. அதன் பிறகு இரு நாட்டுப் படைகளும் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பாதுகாப்புப் படையினருக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தென்மண்டல ராணுவத் தளபதி ஹரீஷ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வீரர்களை கெüரவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
டோக்கா லாம் பிரச்னையை இந்திய ஊடகங்கள் மிகவும் கவனமாகவும், பொறுப்புணர்வோடும் கையாண்டன. அதைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்தியா - சீனா இடையே ராஜீயரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து டோக்கா லாம் விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டது. அதற்காக இத்துடன் இப்பிரச்னை முடிந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. டோக்கா லாம் விவகாரத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு எந்த சிக்கலும் வராது என்றும் கூற முடியாது.
எனவே, எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் தயார் நிலையில் இருக்கும். அதன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படாது. எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் ஆயத்தமாக இருப்பார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com