475 விஐபிக்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு: மறுஆய்வு செய்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் தற்போது 475 முக்கியப் பிரமுகர்களுக்கு இஸட் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் தற்போது 475 முக்கியப் பிரமுகர்களுக்கு இஸட் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஐபி கலாசார முறையை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்து வரும் நிலையிலும், சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், அந்த நடைமுறையை ஆய்வுக்குட்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கு சமூகத்தில் இன்னமும் அச்சுறுத்தல்கள் நீடிக்கின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாதுகாப்பை தொடரலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் மட்டுமன்றி பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கியப் பதவிகளை வகிப்பவர்களுக்கும் தேவையின் அடிப்படையில் இஸட் பிளஸ், இஸட், எக்ஸ், ஒய் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மெய்காவல் அளிக்கப்படுகிறது.
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டோருக்கு இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று வேறு சில தலைவர்களுக்கு மற்ற பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வரும் நிலையிலும், அவருக்கு அளிக்கப்படும் சிறப்புப் பாதுகாப்பு தொடர்கிறது.
இந்நிலையில், அவர்களது உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் நீடிக்கிறதா என்பது குறித்து மத்திய உள்துறைச் செயலர் தலைமையிலான குழு அடுத்த சில நாள்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அதன் வாயிலாக இனி வருங்காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உளவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com