அரசு பங்களா விவகாரம்: தேஜஸ்வியின் கோரிக்கையை நிராகரித்தார் நிதீஷ் குமார்

பிகார் துணை முதல்வராகப் பதவி வகித்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவிலேயே தற்போதும் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் கோரிக்கையை முதல்வர் நிதீஷ்

பிகார் துணை முதல்வராகப் பதவி வகித்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவிலேயே தற்போதும் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் கோரிக்கையை முதல்வர் நிதீஷ் குமார் நிராகரித்துவிட்டார்.
லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சி நடத்தி வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி, கடந்த ஜூலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
பின்னர், பாஜகவுடன் ஆதரவுடன், மீண்டும் முதல்வராக நிதீஷ் பொறுப்பேற்றார். அப்போது, பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடிக்கு துணை முதல்வர் பதவியும், மேலும் 14 பேருக்கு அமைச்சர் பதவிகளும் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்களை மாற்றி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பாட்னாவின் தேஷ்ரத்னா மார்க்கில் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி தங்கியிருக்கும் அரசு பங்களா, தற்போதைய துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு ஒதுக்கப்பட்டது. தேஜஸ்விக்கு, வேறு பங்களா ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தான் ஏற்கெனவே தங்கியிருக்கும் அரசு பங்களாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க கோரி, முதல்வர் நிதீஷ் குமாருக்கு தேஜஸ்வி கடிதம் எழுதினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு முன் பேசிய நிதீஷ் குமார், "அரசு தரும் வசதிகள் மீது எவரும் தனிப்பட்ட விருப்பம் கொள்ளக் கூடாது. இன்று நான் முதல்வர் இருக்கையில் இருக்கிறேன். இது நிரந்தரமல்ல' என்று கூறினார்.
இந்நிலையில், அமைச்சர்களுக்கான பங்களாக்களை மாற்றி ஒதுக்கி, அரசு பிறப்பித்த ஆணையில் எந்த மாற்றமும் இல்லை என்று மாநில கட்டுமானத் துறை அமைச்சர் மகேஷ்வர் ஹசாரி வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தார். நிதீஷ் அரசின் இந்த முடிவை, ஆர்ஜேடி விமர்சித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com