உட்கட்சித் தேர்தல் மூலம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார்

உட்கட்சித் தேர்தல் மூலம் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
உட்கட்சித் தேர்தல் மூலம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார்

உட்கட்சித் தேர்தல் மூலம் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மொய்லி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும். அதுதான் கட்சிக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. அவர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்பது கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். அவர் தலைவர் பதவிக்கு உயர்த்தப்படுவது தாமதமாவதாகவே காங்கிரஸில் உள்ள ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.
தற்போது உட்கட்சித் தேர்தலை நடைபெறுவதற்காக ராகுல் காத்திருக்கிறார். இந்தத் தேர்தல் நடைமுறை மூலம் மட்டுமே அவர் தலைவராகப் பொறுப்பேற்பார். பல்வேறு மாநிலங்களிலும் உள்கட்சித் தேர்தல் நடைமுறையானது அடுத்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அகில இந்திய அளவிலான பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும். அனேகமாக அடுத்த மாதம் ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்த என்ன செய்ய வேண்டியுள்ளது என்று கேட்கிறீர்கள். அதைத் தான் ராகுல் காந்தி செய்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்னைகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களை விட வேறுபட்டதாகும். எனவே, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு மட்டுமன்றி, 2019இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கும் மாநில வாரியான உத்திகள் தேவைப்படுகின்றன.
ராகுல் காந்தியிடம் புதிய அணுகுமுறையும் புதிய பாணியும் உள்ளன. அவர் தலைவராவது என்பது காங்கிரஸ் பாரம்பரியம் சார்ந்ததாகும். ராகுல் தலைவராகப் பொறுப்பேற்றதும், முதல் நடவடிக்கையாக மாநிலங்களில் பொறுப்பாளர்களாக உள்ளவர்களை மாற்றியமைக்க வேண்டும். அடிமட்ட அளவில் இருந்து மாநில அளவிலான அமைப்புகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
தேசிய அளவிலும் மாநில அளவிலும் நமது கொள்கைகள் தகவமைக்கப்படுவதோடு, அவை அச்சிட்டு வெளியிடப்படவேண்டும். தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எப்போதும் மாற்று சக்தி உள்ளது என்று மக்கள் நினைப்பதற்காக அதைச் செய்வது அவசியமாகும்.
கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் கேள்விக்கே இடமில்லை.
மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தவறிவிட்டது. இது மிகவும் மோசமான நிலையாகும். தற்போதை அரசின் மாயையானது வரும் 2019இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கலைந்து விடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com