டார்ஜீலிங்கில் மோதல்: ஜிஜேஎம் ஆதரவாளர்கள் 12 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம், காலிம்போங் மாவட்டத்தில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலம், காலிம்போங் மாவட்டத்தில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டார்ஜீலிங் மலைப் பகுதியை தனிமாநிலமாக்கக் கோரி நடைபெற்றுவரும் முழு கடை அடைப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் 93-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், காலிம்போங் மாவட்டத்தில் கடையைத் திறக்க சிலர் முயன்றனர். அப்போது அங்கு வந்த ஜிஜேஎம் ஆதரவாளர்கள் கடைகளைத் திறக்கவிடாமல் தடுத்தனர். மேலும், அங்கு வந்த பள்ளி வேன் ஒன்றின் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர்.
எனினும், அவர்கள் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மத்திய அரசு , மாநில அரசு ஆகியவற்றுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிட வேண்டாம் என்று
ஜிஜேஎம் தலைவர் பிமல் குருங் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் காவலுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிலிகுரியிலிருந்து குர்ஸியாங் வழியாக டார்ஜிலிங்குக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனிமாநிலம் கோரி சில பகுதிகளில் அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com