மாணவர்கள் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கென பிரத்யேக விதிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு உரிய பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கென பிரத்யேக விதிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு உரிய பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர்கள் அபா சர்மா, சங்கீதா பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்கள் அந்தந்தப் பள்ளி வளாகங்களிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், கொலை செய்யப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கென விதிமுறைகள் வகுக்கப்படாததும், நடைமுறையில் இருக்கின்ற விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகும்.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்கென தனிக் கொள்கைத் திட்டம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும், அந்தத் திட்டத்தில் உள்ள அம்சங்கள் அனைத்தும் அப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் முறையாக விளக்கப்பட்டிருக்கவும் வேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றப்படவில்லை.
அதேபோல், அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழு இருக்க வேண்டும்; பள்ளிகளில் சேர்க்கப்படும் ஊழியர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா என்பதை காவல்துறை மூலம் ஆராய வேண்டும்; பள்ளிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மதுபானக் கடைகள், பான் பொருள்கள் கடை இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவையாவும் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை.
எனவே, இந்த விதிமுறைகளை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கென பிரத்யேக விதிமுறைகளை வகுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரியாணா மாநிலம் குர்ஹானில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவனின் தந்தை தாக்கல் செய்துள்ள மனுவையும் இந்தப் பொதுநல மனுவுடன் இணைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பொதுநல மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com