முல்லைப் பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம்: பேசித் தீர்வு காண உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்தும் மையம் விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
முல்லைப் பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம்: பேசித் தீர்வு காண உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்தும் மையம் விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சுப்ரமணிய பிரசாத், உமாபதி ஆகியோர் ஆஜராகி, "வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பிச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என்றனர்.
கேரளத்தின் சார்பில் வழக்குரைஞர்கள் ஜெய்தீப் குப்தா, கோபால் கத்தார்கி ஆகியோர் ஆஜராகி, இது தொடர்பாக ஏற்கெனவே சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உருவாக்கப்படவுள்ள வாகன நிறுத்த மையம் விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு அரசுகளும் நவம்பர் 27-ஆம் தேதிக்குள் சுமுகமாகப் பேசித் தீர்க்க முயலுங்கள்' என தெரிவித்தனர்.
பின்னணி: படகு சவாரி செய்ய தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்த மையம் அமைக்க கேரள வனத் துறை இடம் தேர்வு செய்தது.
இந்த இடம் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருப்பதாக சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் குமுளியைச் சேர்ந்த தாமஸ், கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் குமுளி ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2015, செப்டம்பர் 5-ஆம் தடை விதித்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய தலைமை நில அளவை அலுவலர் சொர்ண சுப்பாராவ், மத்திய வனத் துறை இயக்குநர் சோமசேகர் ஆகியோர் அடங்கிய குழுவையும் அமைத்தது. ஆய்வுக் குழு தனது அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், குமுளி பகுதியில் கட்டடங்கள் இல்லாத வாகன நிறுத்த மையம் அமைத்துக் கொள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள குமுளியில் வாகன நிறுத்த மையம் அமைப்பதற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com