ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதியை விசாரிக்க கோரிய மனு மீது செப்.19-இல் மீண்டும் விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை சிபிஐ விசாரிக்கவில்லை எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை செப்டம்பர் 19-ஆம் தேதி மீண்டும்
ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதியை விசாரிக்க கோரிய மனு மீது செப்.19-இல் மீண்டும் விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை சிபிஐ விசாரிக்கவில்லை எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை செப்டம்பர் 19-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை சிபிஐ விசாரிக்கவில்லை.
இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாகச் செயல்படுகிறது என முறையிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஜி. பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், "ராஜீவ் கொலை வழக்கில் கூட்டுச் சதி செய்ததாக பேரறிவாளன் தண்டிக்கப்பட்டுள்ளார்.
எனவே, சதிச் செயலின் நோக்கம் தொடர்பான விசாரணையை சிபிஐ தலைமையில் செயல்படும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை விவரத்தை நான்கு வாரங்களுக்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, "ராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணை அல்லது விரிவான விசாரணையின் முடிவு என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஐஇடி வெடிகுண்டு தொடர்பான விவரங்களை மூடப்பட்ட உறையில் நீதிபதிகளிடம் சிபிஐ ஆகஸ்ட் 22-ஆம் தேதி அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது இந்த வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாதரர் பேரறிவாளன் சார்பில் வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி "ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 18 ஆண்டுகளாக என்ன நடந்தது குறித்து என்பதை அறியும் வகையில் சிபிஐ தாக்கல் செய்த விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் வாசித்துப் பார்க்க கடந்த முறை அனுமதிக்கப்பட்டது' என்றார்.
அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் குறுக்கிட்டு, "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழக்கு தொடர்பான விவரங்களை அளித்துள்ளோம்.
ராஜீவ் கொலை வழக்கில் மனுதாரருக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளதால், இந்த விவரங்களை வாசித்து ப் பார்க்க மனுதாரரை அனுமதிக்கக் கூடாது' என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், "விசாரணை விவரங்களை நாங்களும் படித்துப் பார்த்தோம். மனுதாரருக்கு விவரங்களை அளிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் உரிமை' எனத் தெரிவித்து, இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com