எங்களது உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூறக் கூடாது: இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு இந்தியா பதிலடி

எங்களது உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூற வேண்டாம் என்று இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பிடம் (ஓஐசி) ஐ.நா. சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எங்களது உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூற வேண்டாம் என்று இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பிடம் (ஓஐசி) ஐ.நா. சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மொத்தம் 57 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பான ஓஐசி, தன்னை "முஸ்லிம் உலகின் குரல்' என்று கூறிக் கொள்கிறது. இந்த அமைப்பானது காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஓஐசி கடந்த ஜூலை மாதம் கூறுகையில், "காஷ்மீரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் காஷ்மீர் பிரச்னை பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது' என்று தெரிவித்தது. மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற ஓஐசி அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தக் கருத்து வெளியானது.
அப்போது பாகிஸ்தான் பிரதமரின் அப்போதைய ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பேசுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியா கொடுமைகளை இழைத்து வருவதாகப் பேசினார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
இந்நிலையில், இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.வில் பேசியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் சுமித் சேத் பேசியதாவது:
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு இல்லை. அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துகள், உண்மைத்தன்மை அடிப்படையில் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீர் குறித்த தவறான கருத்துகளாக உள்ளன. மேலும், தவறாக வழிநடத்துபவையாகவும் உள்ளன.
இதுபோன்ற கருத்துகள் அனைத்தையும் இந்தியா நிராகரிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்து மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். இப்போது வெளியிட்டதைப்போன்ற கருத்துகளை எதிர்காலத்தில் வெளியிட வேண்டாம் என்று இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு அறிவுறுத்துகிறோம் என்று சுமித் சேத் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com