கல்வீச்சு: இருவரை காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ-க்கு நீதிமன்றம் அனுமதி

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடுவதற்கு பொதுமக்களைத் தூண்டியது தொடர்பாக, புகைப்படச் செய்தியாளர் உள்ளிட்ட இருவரை காவலில் எடுத்து விசாரிக்க தேசியப் புலனாய்வு அமைப்புக்கு

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடுவதற்கு பொதுமக்களைத் தூண்டியது தொடர்பாக, புகைப்படச் செய்தியாளர் உள்ளிட்ட இருவரை காவலில் எடுத்து விசாரிக்க தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வரும் என்ஐஏ அமைப்பு, ஜாவேத் அகமது பட், கம்ரான் யூசுப் ஆகிய இருவரை இந்த மாதம் 5-ஆம் தேதி கைது செய்தது. அவர்களை 10 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், அந்த அனுமதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அந்த இருவரையும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்திய என்ஐஏ, அவர்களை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதற்கான அனுமதியைக் கோரியது.
இதுகுறித்து ரகசிய விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், அவர்கள் இருவரையும் இந்த மாதம் 19-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட இருவரில் புகைப்படச் செய்தியாளரான யூசுப், போலீஸாரின் எச்சரிக்கைகளையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களைப் படமெடுத்து உள்ளூர் மற்றும் தேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியிட்டு பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இளைஞர்களைத் திரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பட், யூசுப் ஆகிய இருவரும், வதந்திகளையும், கோபத்தையும் பரப்பும் வகையில் விடியோக்கள், படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பியதாகவும் என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com