குடும்ப, ஜாதி அரசியலை அகற்றுவதில் பாஜக வெற்றி: அமித் ஷா

"நாட்டில் குடும்ப மற்றும் ஜாதி அரசியலை அகற்றுவதில் பாஜக வெற்றி கண்டுள்ளது' என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.
குடும்ப, ஜாதி அரசியலை அகற்றுவதில் பாஜக வெற்றி: அமித் ஷா

"நாட்டில் குடும்ப மற்றும் ஜாதி அரசியலை அகற்றுவதில் பாஜக வெற்றி கண்டுள்ளது' என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நிகழ்ந்தன. மேலும், கொள்கை முடக்கம் காரணமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் காங்கிரஸ் அரசு திணறியது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய அரசாகத் திகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகளால் சுமத்த முடியவில்லை.
வளர்ச்சிப் பாதையில்..: மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நாடு பெரிய அளவில் மாற்றமடைந்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார அளவீடுகளே, அதற்கு சாட்சியாக உள்ளன. விலைவாசி குறைந்துள்ளது. உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது.
ஏழைகள், தலித்துகள், பின்தங்கிய மக்கள், பெண்கள்,இளைஞர்கள் என அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 
2.8 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள்: கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 2.8 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மின்இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 4.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) செயல்படுத்தியதன் மூலம் "ஒரே நாடு, ஒரே வரி' என்பது சாத்தியமாகியுள்ளது.
"துல்லியத் தாக்குதல்': அண்டை நாடுகளுடனான பாதுகாப்பு விவகாரங்களில், தனது மதிப்பை உறுதி செய்வதற்காக இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளோம். இந்திய ராணுவம் அண்மையில் நடத்திய துல்லியத் தாக்குதல், அதற்கு ஓர் உதாரணமாகும்.
கருப்புப் பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்ததுடன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. பினாமி பெயரில் சொத்துகள் சேர்ப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார் அமித் ஷா.
சீனாவுக்கு பதிலடி: வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் முன்வந்துள்ள நிலையில், எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "நமது நாட்டின் எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது, நமது இறையாண்மை ரீதியிலான உரிமையாகும். இந்த விஷயத்தில், இந்தியாவின் கொள்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மிகச் சிறப்பாக தெளிவுபடுத்தியுள்ளார்' என்றார்.

ராகுல் காந்திக்கு கேள்வி

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு நிறைய பேசுகிறார். நேரு-காந்தி அரசியல் குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்தனர். தனது 4 தலைமுறை முன்னோர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து ராகுல் முதலில் விளக்கமளிக்க வேண்டும்.
ஜார்க்கண்ட் முதல்வருக்கு புகழாரம்: முதல்வர் ரகுவர் தாஸின் ஆட்சியில், ஜார்க்கண்ட் வளர்ச்சி பாதையில் பயணித்து வருவதுடன், ஊழல் இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. 8.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன், நாட்டிலேயே குஜராத்துக்கு அடுத்த 2-ஆவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கினார். தற்போதைய பிரதமர் மோடி, அதனை மேம்படுத்தி வருகிறார் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com