நர்மதா அணையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்.17) நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
நர்மதா அணையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்.17) நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 67}ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் வசிக்கும் தனது தாயார் ஹிரபாவின் ஆசிர்வாதத்தை பெற பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை வருகை தரவுள்ளார்.
பின்னர் நர்மதா மாவட்டம், கேவாடியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், "சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணிக்கவுள்ளேன்; இந்த திட்டத்தால், லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர். மேலும், ஏராளமான மக்களின் விருப்பங்கள் பூர்த்தியடைவதற்கும் உதவியாக இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானி கூறுகையில், "சர்தார் சரோவர் அணைத் திட்டம், குஜராத் மாநிலத்தின் வாழ்வாதாரமாகும். இதனால், மாநிலத்தில் விவசாயிகளின் வருமானமும், விவசாயப் பொருட்களின் உற்பத்தியும் இருமடங்கு அதிகரிக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பரத் பாண்டியா கூறுகையில், "இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சேபணை தெரிவித்து, காங்கிரஸ் கட்சி பாவம் செய்துள்ளது. நாட்டின் பிரதமராக பதவியேற்ற 20 நாள்களில், அணையின் உயரத்தை உயர்த்துவதற்கு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்' என்றார்.
சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்ததும், நர்மதை ஆற்றில் இருக்கும் சாது பெட் எனும் தீவுக்கு பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார். அந்தத் தீவில்தான், நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரமுடைய இரும்பு சிலை அமைக்கும் பணி நடக்கிறது. அதன்பின்னர் நர்மதா மகாத்சவ் விழாவை நிறைவு செய்துவைத்து, பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். அப்போது தேசிய பழங்குடியினர் சுதந்திர போராட்டத் தியாகிகள் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். பின்னர், அம்ரேலிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
நர்மதை ஆற்றின் மீது அணை கட்டும் திட்டத்துக்கு, கடந்த 1961}ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5}ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். அதையடுத்து தொடங்கிய அணை கட்டும் பணியில், நீதிமன்ற வழக்குகள் உள்பட பல்வேறு பிரச்னைகளினால் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. இதனால், அணை கட்டி முடிப்பதற்கு 56 ஆண்டுகள் நீடித்தது. இந்த அணையின் உயரம், 138.68 மீட்டர் ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com