போலி வருமான வரித்துறை அதிகாரிகளை 'கவனித்த' குடும்பம்!

வருமான வரித்துறை அதிகாரிகள் போன்று வேடமிட்ட போலியானவர்களை கண்டுபிடித்த குடும்பத்தினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலி வருமான வரித்துறை அதிகாரிகளை 'கவனித்த' குடும்பம்!

தில்லி மால்வியா நகர் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் டாடா சஃபாரி ரக காரில் 6 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது.

அந்த காரில் ஹரியாணா அரசாங்கத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது. அவர்கள் அங்கு உள்ள ரமேஷ் சந்த் என்ற தொழிலதிபர் இல்லத்துக்குச் சென்றனர்.

அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். பின்னர் இல்லத்தில் இருந்தவர்கள் அனைவரின் தொலைபேசி அழைப்புகளையும் துண்டித்தனர்.

இதையடுத்து ரூ.20 கோடி பணத்துக்கு கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருந்த ரொக்கம் மற்றும் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதாகத் தெரிவித்தனர். ரூ.20 லட்சம் அபராதம் எனக் கூறி அந்தத் தொகையையும் பெற்றனர்.

இந்நிலையில், அந்தத் தொழிலதிபரின் மகள் அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் சந்ஜீவ் ராவ் என்பவரிடம் நடந்ததைக் கூறினார். சந்ஜீவ் ராவ் போலிஸ் நண்பர்கள் குழுவில் இருப்பவர். எனவே அவர் அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினார்.

பின்னர் அதனை பரிசோதித்ததில் அவர்கள் போலியானவர்கள் என்பது தெரியவந்தது. இதற்குள் அக்கம்பக்கத்தினர் சுமார் 150 பேர் வரை தொழிலதிபர் ரமேஷ் இல்லத்தில் குவிந்தனர். அந்தப் போலி அதிகாரிகளை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் காவல்துறையிடம் அந்த போலி ஆசாமிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலிஸ் விசாரணை மேற்கொண்டது. அதில், அந்தப் போலி ஆசாமிகள் வந்த காருடன் மற்றொரு ஹோண்டா சிட்டி ரக கார் ஒன்றில் அவர்களது கூட்டாளியும் உடன் வந்துள்ளான். இவை அனைத்து அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், மிதேஷ் குமார், நௌன்யால், யோகேஷ் குமார், கோவிந்த் ஷர்மா, அமித் அகர்வால், பர்விந்தர் என அவர்களது பெயர்களை போலிஸார் வெளியிட்டனர். மற்றொரு காரில் இருந்தவன் பெயர் கௌரவ் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து பணம், நகை, கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தொழிலதிபர் ரமேஷ் குறித்த தகவல்களை அளித்த நபர், இதுபோன்று வேறு எங்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com