இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்பை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார்: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்பைத் தொடங்கியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்பை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார்: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்பைத் தொடங்கியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
பிரதமர் மோடியின் 67-ஆவது பிறந்த தினத்தையொட்டி அமித் ஷா, இணையதள வலைப்பூ (பிளாக்) ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் வாழ்க்கையானது பல்வேறு விதங்களில் இந்திய உணர்வின் உருவகமாகத் திகழ்கிறது. ஏழைகளின் விருப்பங்கள் மீது அவர் கொண்டுள்ள கவலையானது இந்திய வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு ஏழ்மை ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்துள்ளது.
நேர்மையான முறையில் வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள், ரூபாய் நோட்டு வாபஸ் உள்ளிட்ட கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தாங்கள் கௌரவிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.
நமது தேசத்தை பிரதேச ரீதியில் ஒருங்கிணைத்ததற்காக சர்தார் வல்லபபாய் படேலை இந்தியா நினைவுகூர்கிறது. நமது சமூக ஒருங்கிணைப்பில் பாபாசாஹேப் அம்பேத்கரின் பங்களிப்பை நாம் நினைவில் கொண்டுள்ளோம். அதேபோல், ஜன் தன் திட்டம் முதல், ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரை பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மூலம் இந்தியாவை பொருளாதார ரீதியில் ஒருங்கிணைக்கும் முயற்சியை நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் அவர்களை மோடி அதிருப்தியடையச் செய்துள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும் என்று பல்லாண்டுகளாக இருந்து வந்த நிலை மாறிவிட்டது. தற்போது ஏழை மக்கள் தங்களுக்கு உரியதைப் பெற்று வருகின்றனர்.
எனக்கும் மோடிக்கும் இடையே நீண்ட கால நட்புறவு உள்ளது. அவர் தனது பிறந்த நாளை எப்போதும் கொண்டாடியதில்லை. மக்கள் சேவையில் ஈடுபடுவதே அவரது பிறந்த நாளைக் கொண்டாட சிறந்த வழியாகும்.
மோடியின் இதயம், இந்தியாவில் உள்ள ஏழைகள், நலிவடைந்தோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், விவசாயிகள் ஆகியோருக்காகவே துடிக்கிறது. அவர்களின் நலவாழ்வு தொடர்பான கவலையே தேச நிர்மாணத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று மோடியை இளவயதிலேயே உத்வேகம் கொள்ளச் செய்தது.
"இந்தியாவுக்கே முதலிடம்' என்ற நம்பிக்கையிலேயே அவர் வாழ்ந்து வந்துள்ளார். மோடியை கருணை மிகுந்த தலைவராகவே இந்தியர்கள் பார்க்கின்றனர். தங்களில் ஒருவராகவும், தங்களுடைய நலன் மற்றும் நாட்டின் நலனுக்காக இரவு பகலாக உழைக்கும் நபராகவும் அவரை இந்நாட்டு மக்கள் பார்க்கின்றனர். 
மோடியின் செல்வாக்கு அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது என்று அமித்ஷா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காந்திஜியின் கனவை நனவாக்க மோடி உறுதி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பண்டித தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு பிறந்த தினக் கொண்டாட்டத்தை அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தூய்மை தொடர்பான காந்தியடிகளின் கனவை நனவாக்க மோடி உறுதிபூண்டுள்ளார். அந்தத் திசையில் ஏற்கெனவே முயற்சிகள் தொடங்கி விட்டன. மக்களின் பங்களிப்பு இல்லாமல், அரசின் திட்டங்கள் வாயிலாக மட்டுமே தூய்மையை எட்டி விட முடியாது என்று பிரதமர் நம்புகிறார். அதனால்தான் தூய்மைத் திட்டத்தை மக்கள் இயக்கமாக அவர் மாற்றியுள்ளார். அதன் பலன்களை நாம் காணலாம் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com