"இனிப்பு' புரட்சி: விவசாயிகளுக்கு மோடி அழைப்பு

உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இனிப்புப் புரட்சியை விவசாயிகள் ஏற்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
"இனிப்பு' புரட்சி: விவசாயிகளுக்கு மோடி அழைப்பு

தேன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இனிப்புப் புரட்சியை விவசாயிகள் ஏற்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் வேளாண் பொருள் விற்பனை சந்தை, ஐஸ் கிரீம் தொழிற்சாலை, தேன் உற்பத்திப் பண்ணை ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
இப்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தங்கள் வருமானத்தை அதிகரிக்க சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த விவசாயிகள் முன் வர வேண்டும். இது தொடர்பாக அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும்.
இந்திய விவசாயிகள் ஏற்கெனவே பசுமைப் புரட்சியையும், வெண்மைப் புரட்சியையும் ஏற்படுத்திவிட்டனர். தேன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இனிப்புப் புரட்சிக்கு வித்திட வேண்டும். தேன் உற்பத்தி விவசாயிகளுக்கு மிகவும் எளிதானது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். பால் கூட்டுறவுக் கொள்முதல் மையங்கள் மூலம் தேனை விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்வதன் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும். 
தேனை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு பெரிய அளவில் செலவு ஆவது இல்லை. இயற்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் தேன் உற்பத்தி நடைபெறுகிறது. இதனை வாங்கிப் பயன்படுத்துபவர்களுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
குஜராத் மாநிலம் 1,600 கி.மீ. தொலைவு கடற்கரைப் பகுதியைக் கொண்டது. இதில் பல்வேறு துறைமுகங்கள் அமைப்பதன் மூலமும், புதிய நீர் வழிப் பாதைகளை ஏற்படுத்துவதன் மூலமும் நீலப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதனால், கடற்கரையோரப் பகுதிகளில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கடற்கரைப் பகுதி இளைஞர்கள் அதிக அளவில் கடற்படையில் சேர மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com