குருதாஸ்பூர் இடைத் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் ராணுவ அதிகாரி அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ் கஜுரியாவின் (64) பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ் கஜுரியாவின் (64) பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
குருதாஸ்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த நடிகர் வினோத் கன்னா (பாஜக) கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக முன்னாள் ராணுவ அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் கஜுரியாவின் பெயர் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சுக்பால் கைரா கூறுகையில், "குருதாஸ்பூர் தொகுதி கட்சி நிர்வாகிகளுடனான தீவிர ஆலோசனைக்குப் பிறகே, கஜுரியாவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது' என்றார்.
குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பதான்கோட்டில் இருக்கும் பங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜுரியா. ராணுவத்தில் 37 ஆண்டுகளாக பணியாற்றியபோது, படைப்பிரிவு கமாண்டராகவும், பிரிகேடியராகவும் பஞ்சாபில் இருமுறை பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து கைரா தெரிவிக்கையில், "குருதாஸ்பூர் தொகுதி இடைத் தேர்தலில், அறிமுகமில்லாத நபரை வேட்பாளராக நிறுத்துவதற்கு பாஜகவும், காங்கிரஸýம் திட்டமிட்டு வருகின்றன; ஆனால், ஆம் ஆத்மி கட்சியோ, குருதாஸ்பூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது' என்றார்.
குருதாஸ்பூர் தொகுதியானது, பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்தத் தொகுதியில் நடிகர் வினோத் கன்னாபாஜக சார்பில் கடந்த 1998-ஆம் ஆண்டில் முதல்முறையாக போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், 5 முறை எம்.பி.யாக இருந்தவருமான சுக்பன்ஸ் கௌர் பிந்தரை தோற்கடித்தார். 
இதேபோல், 1999, 2004-ஆம் ஆண்டு தேர்தலிலும் வினோத் கன்னா வெற்றி பெற்றார். இருப்பினும், 2009-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் சிங் பாஜ்வாவிடம் வினோத் கன்னா தோல்வியடைந்தார். எனினும், 2014ஆம் ஆண்டு தேர்தலில் வினோத் கன்னா 1.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ்வாவை தோற்கடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com