சர்தார் சரோவர் அணை திட்டம்: தேர்தல் தந்திர வேலைகளுக்கு பயன்படுத்துகிறார் மோடி

சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் தந்திர வேலைக்காகப் பயன்படுத்துகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சர்தார் சரோவர் அணை திட்டம்: தேர்தல் தந்திர வேலைகளுக்கு பயன்படுத்துகிறார் மோடி

சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் தந்திர வேலைக்காகப் பயன்படுத்துகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்புப் பிரிவு தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 1961-ஆம் ஆண்டில் சர்தார் சரோவர் அணைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டியது முதல் 1987-ஆம் ஆண்டு வரையிலும், இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் காரணங்களுக்காக பலமுறை முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. 
நாட்டின் பிரதமராக ராஜீவ் காந்தி பதவி வகித்தபோதுதான், அனைத்து முட்டுக்கட்டைகளும் படிப்படியாக அகற்றப்பட்டன. அவரது ஆட்சிக்காலத்தில்தான், அணையின் 90 சதவீத பணிகளை செய்து முடிப்பதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. சர்தார் சரோவர் அணைத் திட்டத்துக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்ட போதிலும், அதை செயல்படுத்தி முடிப்பதை காங்கிரஸ் கட்சிதான் உறுதி செய்தது.
அதேநேரத்தில், குஜராத்தில் 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியுள்ளது. அதில் 14 ஆண்டுகாலம் முதல்வராக நரேந்திர மோடி இருந்துள்ளார். இருப்பினும் சர்தார் சரோவர் அணைத் திட்டம் 100 சதவீதம் முழுவதும் நிறைவேற்றப்படவில்லை. சர்தார் சரோவர் அணையில் தற்போது நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரால் விவசாயிகள் பயனடைய முடியாது. ஏனெனில், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் கால்வாய்களை அமைக்கும் பணி இன்னமும் நிறைவடையவில்லை.
குஜராத்தில் இந்த அணைத் திட்டத்துக்கு 90,389 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், 22 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 18,803 கிலோ மீட்டர் தூரத்துக்குதான் பணிகள்தான் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டும் பணி முழுவதும் நிறைவேற்றப்படாத போதிலும், விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை கவனத்தில் கொண்டு, "நர்மதா மகோத்சவ்' எனும் பெயரில் மற்றோர் யாத்திரையை பாஜக தொடங்கியுள்ளது. இந்த யாத்திரையை அது செல்லும் வழியில் போராட்டங்களை நடத்தி குஜராத் மாநில மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள்.
மன்னிக்க முடியாத செயலுக்காகவும், செயல்படாத தன்மைக்காகவும், குஜராத் மாநில மக்கள் பாஜகவுக்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப் போகின்றனர். குறிப்பாக, குஜராத் விவசாயிகள் பதிலடி கொடுக்கப் போகின்றனர்.
இந்த அணைத் திட்ட பயனாளிகளான குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களை பாஜக தோல்வியடையச் செய்துவிட்டது. இந்த அணையால், 19 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக 3 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலமே இந்தத் திட்டத்தால் பயனடைய போகின்றன. இதற்காக குஜராத் மாநில விவசாயிகளிடம் பாஜக அரசும், மோடியும் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறார்கள்?
நர்மதா நிஹம் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. அந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி, வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதை மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. நர்மதா நிஹம் திட்ட நிதியில் மிகப்பெரிய ஊழல், நிர்வாக முறைகேடு நடந்திருப்பது வெளிவந்தபிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஊழல்வாதிகளைக் காக்கும் செயலில் பாஜக ஏன் ஈடுபட்டுள்ளது?
வசதி படைத்தவர்களுக்கு ஆதரவான பாஜக அரசுகள் (மத்திய, பாஜக ஆளும் மாநிலங்கள்), 100 சதவீத விளம்பரத்தை நம்பி, எந்த பணியையும் செய்யாமல் இருக்கும் பிரதமர் மோடி ஆகியோரின் கொள்கைகளைக் கண்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று சுர்ஜேவாலா குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com