தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 10 நாள்களில் 10 ஆயிரம் கழிப்பறைகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில், "தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் வெறும் 10 நாள்களில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், "தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் வெறும் 10 நாள்களில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அபஹன்பூர் பகுதியில், கடந்த 7ஆம் தேதியன்று, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதையடுத்து, 10 நாள்களில் 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அடுத்த மாதம் அதிகாரிகள் அறிவிக்கவுள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், கேந்த்ரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 10 நாள்களில் 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதற்கு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது அரசியல் வாழ்க்கையில், முதல்முறையாக ஒரு பகுதியில் 10 நாள்களில் 10,000 கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். இந்தியாவின் ஆன்மாவானது, கிராமங்களில் இருப்பதாக மகாத்மா காந்தி தெரிவித்தார். ஆதலால், நமது நாட்டின் ஆன்மாவை தூய்மையாகவும், களங்கமில்லாமலும் நாம் வைத்திருக்க வேண்டும்.
சுகாதாரக் குறைவால் ஏற்படும் பல்வேறு நோய்களினால், நமது நாட்டில் ஆண்டுதோறும் 1 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஆதலால், தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, தூய்மையே சேவை திட்டத்தின் நோக்கமாகும். அதுபோல், வாந்தி-பேதி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு குழந்தைகளைக் கொண்டு வரும் தாய்மார்களிடம், குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.
இதையடுத்து, மந்திர் ஹெளசத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தூய்மையே சேவை திட்டத்தை ஸ்மிருதி இரானி தொடக்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com