உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இரு துணை முதல்வர்கள்: எம்எல்சி-க்களாக பதவியேற்பு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் துணை முதல்வர்கள் கேசவ பிரசாத் மெளரியா, தினேஷ் சர்மா ஆகியோர் மாநில மேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) திங்கள்கிழமை பதவியேற்றனர்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக லக்னௌவில் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக லக்னௌவில் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் துணை முதல்வர்கள் கேசவ பிரசாத் மெளரியா, தினேஷ் சர்மா ஆகியோர் மாநில மேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) திங்கள்கிழமை பதவியேற்றனர். அவர்களுடன் மாநில அமைச்சர்கள் சுதந்திரதேவ் சிங், மோசின் ரஸா ஆகியோரும் எம்எல்சிக்களாக பதவியேற்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் கோரக்பூர் எம்.பி.யாக இருந்தார்.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் 6 மாதங்களில் மாநில சட்டப் பேரவை அல்லது மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.
முன்னதாக, சமாஜவாதி கட்சியின் மேலவை உறுப்பினர்கள் 4 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி மேலவை உறுப்பினர் ஒருவரும் தங்கள் கட்சியில் இருந்து விலக பாஜகவில் இணைந்ததுடன், தங்கள் பதவியையும் ராஜிநாமா செய்தனர். அந்த இடங்களுக்கு யோகி ஆதித்யநாத், இரு துணை முதல்வர்கள், இரு அமைச்சர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களை நேரடியாகச் சந்திக்காமல் மேலவை மூலம் முதல்வராவது தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பு முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரும் மேலவை உறுப்பினராகவே இருந்தனர். இப்போது தொடர்ந்து 3-ஆவது முறையாக உத்தரப் பிரதே முதல்வர் மேலவை உறுப்பினராகியுள்ளார்.
உத்தரப் பிரதேச மேலவையில் இப்போது எதிர்க்கட்சிக்குதான் பெரும்பான்மை உள்ளது. மொத்தம் 100 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் சமாஜவாதிக்கு 61 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 13, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 9, காங்கிரஸுக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர். ராஷ்ட்ரீய லோக் தளம் ஓர் உறுப்பினரைக் கொண்டுள்ளது. 12 இடங்கள் சுயேச்சைகள் வசம் உள்ளன. இரு இடங்கள் காலியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com