எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்

ஜம்முவின் ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 6 நாள்களாக ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்முவின் ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 6 நாள்களாக ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் இதற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதனை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்களையும், எல்லைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக இந்தத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து உரிய பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதல்களால் இரு தரப்பிலும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். எனினும், பாகிஸ்தான் தனது தாக்குதல் நிறுத்துவதாக இல்லை.
ஜம்முவின் ஆர்னியா பகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 6 நாள்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் தொடங்கியது. இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினரும், குண்டு வந்த திசையை நோக்கி பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இந்தச் சண்டை திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணி வரை நீடித்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தரப்பு குண்டுகளை வீசுவதை நிறுத்திக் கொண்டது.
பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் இந்தியத் தரப்பில் ராணுவ வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சனிக்கிழமை இரவில் பாகிஸ்தான் படையினர் மோட்டார் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் எல்லைப் பகுதி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com