குஜராத் கலவரத்தின்போது மாயா கோட்னானி சட்டப் பேரவையில் இருந்தார் : அமித் ஷா சாட்சியம்

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரின் நரோதா பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் நடைபெற்ற நாளன்று, காந்திநகரிலுள்ள சட்டப் பேரவையிலும், ஆமதாபாதிலுள்ள பொது மருத்துவமனையிலும்
குஜராத் மாநிலம், நரோதா காம் பகுதியில் கடந்த 2002இல் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
குஜராத் மாநிலம், நரோதா காம் பகுதியில் கடந்த 2002இல் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரின் நரோதா பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் நடைபெற்ற நாளன்று, காந்திநகரிலுள்ள சட்டப் பேரவையிலும், ஆமதாபாதிலுள்ள பொது மருத்துவமனையிலும் முன்னாள் மாநில அமைச்சர் மாயா கோட்னானி இருந்ததாக பாஜக தலைவர் அமித் ஷா சிறப்பு நீதிமன்றத்திடம் சாட்சியம் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே, அடையாளம் தெரியாத நபர்களால் சபர்மதி விரைவு ரயில் பெட்டிகள் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி தீவைத்து எரிக்கப்பட்டது.
இதில் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஏராளமான கரசேவகர்கள் உள்பட 59 பேர் உயிரிழந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, குஜராத் முழுவதும் வெடித்த மதக் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்தக் கலவரம் குறித்து ஆமதாபாதிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வழக்குகளில், நரோதா காம் பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கும் ஒன்று ஆகும்.
இந்த வழக்கில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சரான மாயா கோட்னானி மீது கொலை, குற்றச் சதி, கொலை முயற்சி ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நரோதா காம் கலவரத்தின்போது, தாம் தலைநகர் காந்தி நகரில் இருந்ததாகவும், சட்டப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் மாயா கோட்னானி கூறி வருகிறார். அதனை நிரூபிக்க, பாஜக தலைவர் அமித் ஷாவை சாட்சியாக அழைக்க வேண்டும் என்றும் மாயா கோட்னானி கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், அமித் ஷாவை இதுகுறித்து சாட்சியம் அழைக்க நேரில் வருமாறு அழைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான அமித் ஷா, நீதிபதி பி.பி. தேசாயிடம் கூறியதாவது:
நரோதா காம் கலவரம் நடைபெற்ற 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, குஜராத் சட்டப் பேரவை கூடி கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிரான தீர்மானத்தை இயற்றியது. அந்தக் கூட்டத்தில் மாயா கோட்னானி கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கோத்ரா ரயில் எரிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆமதாபாதிலுள்ள சோலா பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவதை அறிந்த நான், அந்தத் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் அந்த மருத்துவமனைக்குச் சென்றேன்.
அப்போது மாயா கோட்னானியும் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தார். காலை 11.15 முதல் 11.30 வரை அவர் மருத்துவமனையில்தான் இருந்தார். கோத்ரா சம்பவத்தால் கொதித்தெழுந்த பொதுமக்கள் அந்த மருத்துமனையைச் சுற்றி கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். அதனால், என்னையும், மாயா கோட்னானியையும் போலீஸார் தங்களது ஜீப்பில் ஏற்றி அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.


நான் கோட்டா குறுக்குச் சாலையில் இறங்கிக் கொண்டேன். மாயா கோட்னானி மட்டும் ஜீப்பிலேயே இருந்தார். அதற்குப் பிறகு அவர் எங்கு சென்றார் என்ற விவரம் எனக்குத் தெரியாது என்று அமித் ஷா சாட்சியம் அளித்தார்.
மகப்பேறு மருத்துவரான மாயா கோட்னானி, நரோதா தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக 1998-ஆம் ஆண்டு முதல் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது நரோதா காம் மற்றும் நரோதா பாட்டியா பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை அவர் திட்டமிட்டு அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
முஸ்லிம்களைக் கொல்வதற்காக கலவரக்காரர்களுக்கு கத்திகளைக் கொடுத்ததுடன், அவரே முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. கலவரம் நடந்தபோது நரோதா முழுவதும் வாகனத்தில் சுற்றி, கலவரக்காரர்களை அவர் ஊக்கப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், நரோதா பாட்டியா பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் மாயா கோட்னானி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டில் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் மட்டும் 96 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் நரோதா காம் கலவர வழக்கில் அமித் ஷா இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டில் இவரை மாநில அமைச்சராக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com